மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு மாநகராட்சி தேர்தலும், அடுத்த ஆண்டில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் வர இருக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கட்சி முயன்று வருகிறது. இதற்காக மகாராஷ்டிராவில் கட்சியை வளர்க்கும் வேலையில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். அதோடு மகாராஷ்டிரா எல்லையோர நகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் முக்கிய மகாராஷ்டிரா அரசியல் தலைவர்களை தங்களது பக்கம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார், “இதற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் முதல்வர்களாக இருந்த போது மாயாவதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோர் மகாராஷ்டிராவில் தங்களது கட்சியை வளர்க்க முயன்றனர். ஆனால் அவர்களால் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை. அதே முயற்சியை சந்திரசேகர் ராவ் எடுத்துள்ளார். சந்திரசேகர் ராவ் தேசிய தலைவராக வர விரும்பலாம். எனவே இது போன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தெலங்கானா முதல்வராக இருக்கும் சந்திரசேகர் ராவ் மகாராஷ்டிரா கட்சிக்கு தலைமை தாங்க இருக்கிறார்.
எனவே இங்குள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. ராஷ்ட்டிரீய சமிதி கட்சியினர் விளம்பரத்திற்காகவும், பேனருக்காகவும் பணத்தை செலவு செய்கின்றனர். அவர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது?” என்று கேள்வி எழுப்பினார். சந்திரசேகர் ராவ் கடந்த பிப்ரவரி மாதம் நாண்டெட் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “தெலங்கானாவில் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வது போன்று மகாராஷ்டிராவிலும் கொள்முதல் செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். விவசாயிகள் எதிர்பாராமல் இறந்தால் அவர்களுக்கு 5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியும் காலூன்ற முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.