புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் உள்ளாட்சித் தேர்தலின்போது மத்திய துணைராணுவப் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்துவது என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்துள்ளது. மேலும் “தேர்தல் நடத்துவது வன்முறைக்கான உரிமையாக இருக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலின்போது மத்திய துணை ராணுவப்படையினை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசும், தேர்தல் ஆணையமும் சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நகரத்னா மற்றும் மனோஜ் மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற அமர்வு, “உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தவித தலையீடும் செய்யவேண்டியத் தேவையில்லை. உள்ளாட்சித் தேர்தலின்போது மத்திய துணை ராணுவப் படைகளை மாநிலத்தில் பாதுகாப்புக்காக நிலைநிறுத்துவது என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தவித தவறும் இல்லை.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மேற்கு வங்க மாநிலத்தில் சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்துவை நோக்கமாக கொண்டது. இதனால், அந்த உத்தரவில் எந்த தலையீடும் செய்யவேண்டியத் தேவை இருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனவே, இந்த மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது.
மேலும் “தேர்தலின்போது மற்ற மாநிலங்களில் இருந்து படைகளை வரவழைப்பதற்கு பதிலாக மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்புக்கு நிலைநிறுத்தப்படுவது சிறந்தது. செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் உயர் நீதிமன்றம் கருதியிருக்கலாம். தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் தேர்தல் ஆணையம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. எங்கிருந்து படைகள் வருகின்றது என்பது மாநில தேர்தல் ஆணையத்தின் கவலை இல்லை. பிறகு இந்த மனுவினை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று கேள்வியும் எழுப்பியது.
இதற்கிடையே, மாநிலத்தில் நியாயமாக தேர்தலை நடத்துவது எங்களுடைய முதன்மையான பொறுப்பு. அதற்கு தேவையான படைகளை நாங்கள் வழங்குவோம் என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
மேற்கு வங்கத்தில் மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 9-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடந்தது. அப்போது மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கல்கத்தா உயர் நீதிமன்றம் ஜூன் 13-ம் தேதி மாநிலத்தில் தேர்தலை அமைதியாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு பதற்றமான 7 மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மத்திய துணை ராணுவப் படையினரை நிறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.