வீடு கட்டுவதற்கு மட்டும் இடமிருந்தால் சிலருக்கு போதாது. அவர்களது பைக், கார் போன்றவற்றை பார்க் செய்யவும் இடம் தேவைப்படும். அல்லது, `என்னோட வீட்டு வாசல்ல/என் பார்க்கிங் ஏரியால நீ எப்படி பார்க் செய்யலாம்?’ என சில சச்சரவுகள் வரலாம்.
இந்நிலையில், தைவான் நாட்டில் விநோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு, குடியிருப்பு வாசலில் வேனை நிறுத்தியதற்காக, ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் கடுப்பாகிப் போன அவர், தன்னுடைய வீட்டின் குறுகலான மொட்டை மாடியில் தன் வேன்களை பார்க் செய்திருக்கிறார்.
தனது இரண்டு வேன்களில் ஒன்றினை மாடியிலும், மற்றொரு வேனை மொட்டைமாடிக்கும் மேலே உள்ள ஒரு ரூஃப்பில் (roof) நிறுத்தியும் பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தந்திருக்கிறார். அதில் ஒரு வேனின் சிறுபகுதி மாடிக்கு வெளியே அந்தரத்தில் தொங்கியபடி இருந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி, மிரள வைத்திருக்கிறது.
’ஏன் மொட்டை மாடியில் இரண்டு வேன்களை நிறுத்தினார்?’ என்ற கேள்விகள் ஒரு பக்கம் கிளம்ப, ‘அதெல்லாம் சரி… எப்படி நிறுத்தினார்?’ என்று சுவாரஸ்யமானார்கள் பலர்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, வாகனம் நிறுத்தியதற்காக தனக்கு அபராதம் விதித்த விரக்தியில் வேனை மாடியில் பார்க் செய்துள்ளதாகவும், இதற்காக கிரேனை வாடகைக்கு எடுத்து, அதன் மூலமாக இரண்டு வேன்களையும் வீட்டு மொட்டை மாடியில் நிறுத்தியதையும் பகிர்ந்துள்ளார்.
வாகனங்களை மாடியில் இருந்து இறக்கும்படி அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர், `இந்தக் கட்டடம், ஸ்டீல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளது. அதனால் இது எந்த வகையிலும் கட்டடத்தைப் பாதிக்காது. இரண்டு வாகனங்களின் எடையைத் தாங்கும். நான் எந்த விதிகளையும் மீறவில்லை. அதனால் அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ எனக் கூறி, கடைசியில் வாகனத்தைக் கீழே இறக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தைவானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.