மும்பை: மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் 17,500 ரூபாய் செலவு செய்து தனது முகத்துக்கு ஃபேஷியல் மசாஜ் செய்து கொண்டுள்ளார். ஆனால், அதன் பிறகு அவரது தோலில் காயம் (Skin burn) ஏற்பட்டுள்ளது. அதோடு, அது நிரந்தரமாக இருக்கும் என்றும் தெரிகிறது. இதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண், காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அழகு நிலையத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். போலீஸாரும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மும்பையின் அந்தேரி பகுதியில் அமைந்துள்ள காமதேனு வணிக வளாகத்தில் இயங்கி வரும் குளோ லக்ஸ் சலூன் எனும் அழகு நிலையத்தில் கடந்த 17-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண், முகத்துக்கு ஹைட்ரா-ஃபேஷியல் மசாஜ் செய்து கொண்டுள்ளார். இதனை உரிமம் பெற்ற மருத்துவ நிபுணத்துவ வசதிகள் கொண்ட அழகு நிலையம் அல்லது சான்றளிக்கப்பட்ட ஹைட்ரா-ஃபேஷியல் அழகியல் நிபுணர் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிகிறது. இது சருமத்தை ஈரப்பதமாக்கும் சிகிச்சை.
இந்த ஃபேஷியல் முடிந்த பிறகு அந்தப் பெண்ணுக்கு எரிச்சல் இருப்பதாக உணர்ந்துள்ளார். தொடர்ந்து தோல் சிகிச்சை நிபுணரை அவர் அணுகியுள்ளார். அங்குதான் அவரது தோலில் காயம் ஏற்பட்டது குறித்து அவர் அறிந்து கொண்டுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.