டேராடூன்: பஞ்சாப் மாநிலம் லூதியாணா மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனத்துக்குள் கடந்த 10-ம் தேதி பட்டப்பகலிலேயே துப்பாக்கிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி ரூ.8.49 கோடி பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றது.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய போலீஸார் தனிப்படை அமைத்தனர்.தீவிர விசாரணைக்குப் பின்னர் கொள்ளையில் தொடர்புடைய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மந்தீப்கவுர் என்ற பெண்ணும் அவரது கணவர் ஜஸ்வீந்தர் சிங்கும் முக்கிய குற்றவாளிகள் என கண்டறிந்தனர்.
மந்தீப் கவுர், ஜஸ்வீந்தர் சிங்.இதையடுத்து அவர்களைக் கைது செய்ய போலீஸார் திட்டம் தீட்டினர். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி இருவரும் நேபாளம் தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. இதைக் தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் மந்தீப் கவுர், ஜஸ்வீந்தர் சிங் ஆகியோர் உத்தராகண்ட் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. நேபாளம் செல்வதற்கு முன் உத்தரகாண்ட்டில் உள்ள சீக்கிய மத வழிபாட்டு தலமான குருத்வாரா ஹேம்குண்ட் ஷாகிப், இந்துக்களின் புனிதத் தலங்களான ஹரித்துவார், கேதார்நாத்தில் உள்ள இந்து மத வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உத்தராகண்ட் விரைந்த போலீஸார், ஷமோலி மாவட்டத்தில் உள்ள சீக்கிய மத வழிபாட்டு தலமான ஹேம்குண்ட் ஷாகிப் குருத்வாராவுக்குச் சென்றனர். அங்கு பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்த நிலையில் ஜஸ்வீந்தர்-மந்தீப் தம்பதியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் சாதாரண உடையில் அங்கு சென்றனர். பின்னர் புனிதத் தலத்துக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக ரூ.10 மதிப்பிலான ஃப்ரூட்டி பழ ஜூஸ் வழங்கும் திட்டத்தை தொடங்கினர். அப்போது அங்கு வந்த தம்பதிக்கு ரூ.10 மதிப்புள்ள ஃப்ரூட்டி ஜூஸை போலீஸார் கொடுத்தனர். அந்த ஜூஸை குடிக்க அவர்கள் தங்களது முகக் கவசத்தை எடுத்தபோது அவர்கள் மந்தீப் கவுர், ஜஸ்வீந்தர் சிங் என்று தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் உடனடியாக அவர்கள் கைது செய்தனர்.
அப்போது அவர்களிடமிருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை கொள்ளையடித்த தொகையில் ரூ.5.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.10 மதிப்புள்ள பழச் சாறைக் கொடுத்து ரூ.8.49 கோடியைக் கொள்ளையடித்த கும்பலைக் கைது செய்த பஞ்சாப் போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.