அண்ணன்-தம்பிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலைசெய்யப்பட்டிருப்பது வத்திராயிருப்பு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம், “வத்திராயிருப்பு தாலுகா வ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கு, மணிகண்டன் (36), விக்னேஸ்வரன் (33), வேல்முருகன் (28) ஆகிய மூன்று மகன்கள். இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் மதுபோதையில், அண்ணன்-தம்பிகள் மூவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் மணிகண்டன் தாக்கியதில் வேல்முருகனுக்கு இடதுபக்கத் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அவர், வ.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், தலையில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதால், உடனடியாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து வேல்முருகன், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டுக்கு வந்திருக்கிறார். அந்த சமயம், விக்னேஸ்வரனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே சன்டை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பதறிய குடும்பத்தினர், அண்ணன்-தம்பிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறை தடுக்கமுடியாமல் எங்களுக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைவதற்குள், மணிகண்டன், தன்னுடைய தம்பி விக்னேஸ்வரனை அடித்துக் கீழே தள்ளியிருக்கிறார். இதில் தலையில் பலத்த அடிப்பட்டு, துடித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நாங்கள் அங்கு விரைந்து, அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதையடுத்து, அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தோம். அதேபோல காயமடைந்த வேல்முருகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்து, மணிகண்டனைக் கைதுசெய்தோம்” என்றனர்.