இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இனவன்முறைகள் ஓயாமல் தொடர்ந்து நீடிப்பதால் ஆளும் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்வதுதான் ஒரே வழி என மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆலோசனை நடத்துவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசே, மாநில பாஜக அரசு ஒன்றை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என ஆலோசிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் 2-வது மாதமாக குக்கி- மைத்தேயி இனமக்களிடையேயான மோதல் நீடித்து வருகிறது. தற்போது இந்த மோதல், அரசியல் கட்சிகளுக்கு எதிராக திரும்பி உள்ளது. குறிப்பாக பாஜக தலைவர்கள், பாஜக அலுவலகங்களை தொடர்ந்து தாக்கும் நிலைமைக்கு போயிருக்கிறது.
மணிப்பூர் வன்முறைகளில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள், அகதிகளாக மாநிலத்தைவிட்டே வெளியேறி அண்டை மாநிலங்களான மிசோரம், நாகாலாந்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். இம்மோதல்களைக் கட்டுப்படுத்த 50000க்கும் அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்த போதும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை.
தற்போது மைத்தேயி- குக்கி இரு இனக்குழுவினருமே ஆயுதம் ஏந்தி தாக்குதல்களில் நடத்துகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னெடுத்த அமைதி முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் பிரதமர் மோடி தலையிட்டு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் பிரதமர் மோடி, மணிப்பூர் பிரச்சனை குறித்து மவுனம் காத்து வருகிறார். இதனால் பிரதமர் மோடியின் மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியை மணிப்பூர் மக்கள் புறகணித்தனர். அத்துடன் வானொலிகளை- ரேடியோக்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மணிப்பூர் முதல்வர் பைரோன்சிங் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார். வன்முறையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.
இதனிடையே மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இதனை மத்தியில் ஆளும் பாஜக அரசும் நிராகரிக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது. மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக டெல்லி ஆலோசனை நடத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.