திருமலை: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுத்த தீர்மானங்கள் குறித்து ஒய்.வி. சுப்பாரெட்டி கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வாணி அறக்கட்டளை குறித்து பல அரசியல் கட்சியினர் தவறாக பேசி வருகின்றனர். இந்த அறக்கட்டளை மூலம், 2,445 கோயில்கள் கட்ட தேவஸ்தானம் தீர்மானித்து, அதில் பல கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டன.
மீனவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்து தர்ம பிரச்சாரத்தின் அடிப்படையில் தான் இவ்விடங்களில் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனை அப்பகுதி மக்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். ஆனால், ஒரு சிலர் அரசியல் ஆதாயத்துக்காக, ஸ்ரீவாணி அறங்கட்டளை குறித்தும், அதன் நிதி குறித்தும் அவதூறாக பேசி வருகின்றனர். அப்படி பேசுவோர் மீது கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமலையில் ரூ.4.16 கோடியில் கூடுதல் லட்டு விநியோக மையங்கள் கட்டப்படும். திருமலையில் ரூ.3.55 கோடி செலவில் போலீஸ் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்படும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகத்திற்காக ரூ.5 கோடியில் விருந்தினர் மாளிகைகள் கட்டப்படும். ரூ. 7.44 கோடி செலவில் திருமலையில் நவீன கம்ப்யூட்டர்கள் அமைக்கப்படும். திருச்சானூரில் பத்மாவதி தாயார் குளம் சீரமைக்கப்படும். இவ்வாறு சுப்பாரெட்டி கூறினார்.