ஹைதராபாத்: நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதியினருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தனது தந்தையைப் போலவே தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவாக இருக்கிறார்.
இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்டவராக இருக்கிறார்.
ராம்சரண்: இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ராம் சரண், சிருந்தா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே பிரம்மாண்ட வெற்றி பெற்று, வசூலை வாரிக் குவித்தது. இதையடுத்து, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இதன்பின் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து இன்று டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
மகிழ்ச்சியில் குடும்பம்: ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதிகள் 11 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரான மகிழ்ச்சியான செய்தியை, ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, கர்ப்பிணியான உபாசனாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் வளைகாப்பு நடந்துள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், சானியா மிர்சா மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

தந்தையானார் ராம்சரண்: இந்நிலையில், இன்று காலை ராம்சரணின் மனைவி உபாசனாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 11 ஆண்டு கால கத்திருப்புக்கு பின் ராம் சரண் தந்தையாகி உள்ளதால், அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.