
4 வருடம் கழித்து தியேட்டரில் வெளியாகும் திலீப் படம்
கடந்த 2021ல் கொரோனா தாக்கம் சற்று குறைந்த சமயத்தில் மலையாளத்தில் நடிகர் திலீப் நடிப்பில் துவங்கப்பட்ட படம் 'வாய்ஸ் ஆப் சத்தியநாதன்'. பிரபல இயக்குனரும் திலீப்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவருமான ரபி (மெக்கார்டின்) இந்தப்படத்தை இயக்கி வருகிறார். தமிழில் சரத்குமார் நடித்த தென்காசி பட்டணம் படத்தை இயக்கியவர் இவர் தான். மேலும் திலீப்-கீர்த்தி சுரேஷ் நடித்த ரிங் மாஸ்டர் மற்றும் 2 கண்ட்ரீஸ் படங்களை தொடர்ந்து 'வாய்ஸ் ஆப் சத்தியநாதன்' படத்தில் மீண்டும் திலீப்புடன் கூட்டணி அமைத்துள்ளார் ரபி. இதில் திலீப்புக்கு ஜோடியாக வீணா நந்தகுமார் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் மலையாள குணச்சித்திர நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019ல் திலீப் நடித்த நான்கு படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. அதைத் தொடர்ந்து கடந்த 2021ல் திலீப் நடித்த ‛கேசு இ வீட்டிண்டே நாதன்' என்கிற படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இந்த நிலையில் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் திலீப்பின் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.