இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலின் சிங்மாங் கிராம பகுதியில் அடையாளம் தெரியாத வன்முறையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சம்பவம் நடைபெற்ற பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில்(எஸ்டி) இடம்பெறுவது தொடர்பாக அந்த சமூகத்தினருக்கும் அவர்களுக்கு எதிரான குகி மற்றும் நாகா சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி கடும் மோதல் மூண்டது. ஒரு மாதமாக நடைபெறும் மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு இனக்குழுக்களுக்குள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் சண்டையால் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளின் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் ராணுவத்தினர் இரவுபகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இடம்பெயர்ந்து வரும் மக்களை தங்க வைக்க 35-க்கும்மேற்பட்ட நிவராண முகாம்களை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை மிகவும் சோகமான சூழலை உருவாக்கியுள்ளது. வீடுகளை இழந்த பலர் தங்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பிற்காக நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் அனைத்து வசதிளையும் செய்து தர மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் சில நிவாரண முகாம்களுக்கு சென்று பார்வையிட்டேன். அங்கு மக்கள் அவதிப்படுவதை காணமுடிந்தது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் அமைதி திரும்பும் வரை நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட் டுள்ளவர்களுக்கு 3,000-4,000 தற்காலிக வீடுகளை கட்டித் தர அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இரண்டு மாதங்களுக்குள் நிவாரண முகாம்களில் உள்ளவர்களை தற்காலிக வீடுகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அங்கு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்’’ என்றார்.