ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் தஷ்ரத் குமாவத். இவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு சீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தஷ்ரத் குமாவத் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்தார் சீமா. இது தொடர்பான வழக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் கடந்த 5 வருடங்களாக நடந்து வந்தது.
இந்த நிலையில், சீமாவுக்கு ஜீவனாம்ச உதவித்தொகையாக ரூ.2.25 லட்சத்தை தஷ்ரத் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை தஷ்ரத் ஏற்க மறுத்ததால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தஷ்ரத் குமார் குடும்பத்தினர் ஜீவனாம்சத் தொகையின் ஒரு பகுதியை வழங்குவதாகவும், மீதப்பணத்தைப் பிறகு வழங்குவதாகவும் உறுதியளித்தனர். அதற்காக நீதிமன்றத்தில் ஜீவனாம்சத் தொகையின் ஒரு பகுதியான ரூ.55,000-ஐ 7 பெட்டிகளில் கொண்டுவந்தனர். அந்தப் பெட்டிகளில் 1.ரூ, 2.ரூ, 5.ரூ, 10.ரூ நாணயங்கள் நிரம்பியிருந்தன.
அதன் எடை ஏறத்தாழ 280 கிலோ இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சீமா தரப்பு வக்கில் ராம்பிரகாஷ், “தஷ்ரத் குமாவத், ஜீவனாம்சத் தொகையை இப்படி நாணயங்களாக வழங்குவது, சீமா தரப்பை மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் செயலாகும். இது மனிதாபிமானமற்ற செயல்” என்று வாதிட்டார்.
தஷ்ரத்தின் வக்கீல் ராமன் குப்தா, “இங்கு வழங்கப்பட்டிருக்கும் நாணயங்கள் அனைத்தும் இந்திய அரசால் செல்லுபடியாகும் நாணயங்கள். எனவே அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வாதிட்டார். அதைத் தொடர்ந்து, நீதிபதி, “நாணயங்களை துல்லியமாக எண்ணுவது உண்மையில் சவாலாக இருக்கும்.
எனவே, நாணயங்களை பாதுகாப்பாக சேமித்து, அவற்றை எண்ணுவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பையிலும் 1,000 ரூபாய் நாணயங்களை ஒழுங்கமைத்து, அவற்றை எண்ணும் பணிக்காக ஜூன் 26-ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்” என தஷ்ரத் தரப்புக்கு உத்தரவிட்டார். “தஷ்ரத் தரப்பு உறுதியளிக்கப்பட்ட ஜீவனாம்சத்தில் இன்னும் ரூ.1.7 லட்சத்தை, சீமாவுக்குத் தர வேண்டும். அதை எப்படி கொடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை” என இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.