பாலக்காடு, பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், பள்ளி, அரசு அலுவலகங்களில் மரம் வளர்த்து சுற்றுச்சுழலை பாதுகாக்கும், கேரள மாநில பள்ளி ஆசிரியர் ஒருவரின் செயல்பாடுகளை குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் ‘மன் கி பாத்’ எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மாவேலிக்கரை சாரும்மூடு தாமரைக்குளம் மேல்நிலை பள்ளியின் உயிரியல் ஆசிரியர் ராபி ராம்நாத் செயல்கள் பற்றி குறிப்பிட்டார்.
ராபி ராம்நாத், 2009ல் பள்ளி சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அப்போது இவர், வனத்துறையின் உதவியுடன் பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைத்தார். இந்தத் தோட்டத்தில் தற்போது, 250 ரக செடிகள் உள்ளன.
சாலையோரங்களில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு எதிரான இவரது ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து,மாநில அரசு 2012ல் இதை தடை செய்து உத்தரவிட்டது.
பள்ளிகள், அரசு அலுவலகங்களில், நட்சத்திர வனம், மூலிகை தோட்டம், பட்டாம்பூச்சி பூங்கா ஆகியவற்றை செயல்படுத்தியது வாயிலாக, ஒரு லட்சம் மர நாற்றுகள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மரத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்க ‘நன்மமரம்’ என்ற ஆவணப்படத்தையும் அவர் தயாரித்துள்ளார்.
மாநில பல்லுயிர் வாரியத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது, வனம் துறையின் பிரகிருதி மித்ரா விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள இவரை பிரதமர் மோடி மனதின் குரல் வாயிலாக கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement