புதுடில்லி, அனைத்து விமான நிலையங்களிலும், ‘ஸ்கேனர்’ கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதையடுத்து, பயணியர் உடலை பரிசோதனை செய்யும் நடைமுறை விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.
தற்போது விமான நிலையங்களில், பாதுகாப்புக்காக, ‘மெட்டல் டிடெக்டர்’ கருவிகள் வாயிலாக, பயணியர் மற்றும் ஊழியர்களிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இதற்கு கால தாமதமும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், அனைத்து விமான நிலையங்களிலும், ‘ஸ்கேனர்’ எனப்படும் முழு உடல் பரிசோதனை செய்யும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
இந்த சாதனம், ஒருவரை, மில்லி மீட்டர் அளவுக்கு சோதனை செய்யும் திறன் உடையது.
தற்போது நாடு முழுதும் முழு பயன்பாட்டில் உள்ள, ௧௦௫ விமான நிலையங்களில், புதுடில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை போன்ற பெருநகரங்கள், ஜம்மு – காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட, ௨௮ முக்கிய விமான நிலையங்கள், அதி தீவிர பாதுகாப்பு தேவைப்படும் விமான நிலையங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதைத் தவிர, ௫௬ விமான நிலையங்கள் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில், தலா இரண்டு முதல் நான்கு ஸ்கேனர் கருவிகளை நிறுவ விமான போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, இங்கு பயணியரிடம் பரிசோதனை செய்வது நிறுத்தப்படும்.
‘சந்தேகம் உள்ளவர்களிடம் மட்டும், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளோர் சோதனை செய்வர்’ என, மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்