மும்பை: Akshay Kumar (அக்ஷ்ய குமார்) பாக்ஸ் ஆஃபிஸ்தான் திரைத்துறையினரை உடைக்கவும் செய்கிறது உருவாக்கவும் செய்கிறது என பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அக்ஷய் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் உருவானது. அதில் வில்லனாக அக்ஷய் குமார் நடித்தார்
சர்ச்சை நாயகன் அக்ஷய் குமார்: நடிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு பேசப்பட்டாரோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியும் அக்ஷய் குமார் பேசப்படுவதுண்டு. உடலுக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடித்ததன் மூலம் மிகப்பெரிய எதிர்வினையை சமீபத்தில் அக்ஷய் சந்தித்தார். இதனையடுத்து அதுகுறித்து மன்னிப்பு கேட்ட அக்ஷய், “ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நன்றாக புரிகிறது. இனிமேல் புகையிலை பொருள்களின் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்” என தெரிவித்திருந்தார்.
பிரதமருடன் பேட்டி: இதற்கிடையே நடிகர் அக்ஷய் குமார் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி எடுத்தார். அதனையடுத்து அவர் பாஜகவின் ஆதரவாளரா என பலர் கேள்வி எழுப்பினர். இப்படி அரசியல் சாயம் அவருக்கு பூசப்பட்டாலும் அதை பற்றி அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார்.
பாக்ஸ் ஆஃபிஸில் தாக்கம் இல்லை: அவரது நடிப்பில் கடைசியாக ராம் சேது மற்றும் செல்ஃபி ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆனால் அந்தப் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அடுத்ததாக தி கிரேட் ரெஸ்க்யூ படம் அக்டோபர் மாதமும், ஓ மை காட் 2 படம் ஆகஸ்ட் மாதமும் வெளியாகவிருக்கின்றன.
பாக்ஸ் ஆஃபிஸ் குறித்து அக்ஷய் குமார்: இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ” பாக்ஸ் ஆபீஸ் தோல்வி என்னை பாதிக்கவே செய்கிறது. பாக்ஸ் ஆபீஸ் எண்கள்தான் திரைத்துறையினரை உருவாக்கவும், உடைக்கவும் செய்கிறது. அதைத்தான் ஹிட், ஃப்ளாப் என்கிறார்கள். நாம் எப்போது சரியாக இருக்கிறோம், எங்கே தவறு செய்கிறோம் என்பதை ஆடியன்ஸ் உணர்த்திவிடுகிறார்கள். அவை எல்லாமே பாக்ஸ் ஆஃபீஸ் எண்களில் பிரதிபலித்துவிடுகிறது.
ஏற்ற இறக்கங்கள்: என் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். ஒரு விஷயம் சரியாக நடந்தால் அதை பாராட்டுவதும், அது நினைத்தபடி செல்லவில்லை என்றால் கற்பனை செய்வதை விட மோசமான விமர்சனங்களை எதிர்கொள்வதும் பொதுவான விஷயம்தான். நானும் மனிதன்தான். நல்லது நடந்தால் மகிழும் அதேவேளையில் மோசமான விஷயங்களுக்கு வருந்தவும் செய்வேன்.
கடந்து விடுவேன்: ஆனால், எது நடந்தாலும் உடனே அதனை கடந்துவிடும் திறன் என்னிடம் இருப்பதை பார்ர்த்து பெருமைப்பட்டுக்கொள்வேன். என்னுடைய வேலைதான் என்னை தொடர்ந்து வழிநடத்துகிறது. அதை யாராலும் என்னிடமிருந்து பறித்துவிட முடியாது. நீங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. நேர்மையான உழைப்புக்கான பலன் உங்களை வந்து சேரும் என்பதில் மாற்றமில்லை” என்றார்.