சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நல குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்தில் ஏற்கனவே கூறியது போல மூன்று இடங்களில் அடைப்பு இருந்ததை ஊமதுரர் அரசு மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்ட தற்போது சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிளட் தின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த சிகிச்சை கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறும். அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு பெற்றார். காவேரி மருத்துவனையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் நாளை அதிகாலை அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளது. அறுவை சிகிச்சைக்கும் அமலாக்க துறையின் விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம் என்பதால் நாளை காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு அமலாக்கத்துறை முக்கிய முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.