வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: மும்பை தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி சாஜித் மிரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிக்க கோரி இந்தியா, அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிர தலைநகர் மும்பை 2008 நவம்பர், 26ல், நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் ஒன்பது பேர், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் அமிர் கசாபிற்கு, இந்தியாவில், துாக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டது.
மும்பை தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க விசாரணை அமைப்புகளும், விசாரணை நடத்தி வருகின்றன. மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி சாஜித் மிர் முக்கிய குற்றவாளியாக அறிவித்த அமெரிக்கா , அவன் குறித்த தகவல்களை தெரிவிப்பவருக்கு, ரூ.37 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின், பயங்கரவாத அமைப்பு தடை குழு கூட்டத்தில் சர்வதேச பயங்கரவாதியாக சாஜித் மிர்ரை அறிவிக்க வேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement