சென்னை: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்துள்ள எக்ஸ்ட்ராக்ஷன் 2 திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியானது.
சாம் ஹர்கிரேவ் இயக்கியுள்ள இந்தப் படம் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
முழுக்க முழுக்க ஆக்ஷனில் தரமான சம்பவம் செய்துள்ள எக்ஸ்ட்ராக்ஷன் படத்தை பார்க்க அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் முழுமையான தமிழ் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
எக்ஸ்ட்ராக்ஷன் 2 தமிழ் விமர்சனம்:கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் உருவான எக்ஸ்ட்ராக்ஷன் திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு வெளியானது. நெட்பிளிக்ஸில் ரிலீஸான இந்தப் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது அதனைத் தொடர்ந்து எக்ஸ்ட்ராக்ஷன் 2ம் பாகமும் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தின் இறுதியில் பங்களாதேஷில் உயிருக்காகப் போராடும் ஹீரோ டைலர் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்) அவரது சகாக்களால் காப்பாற்றப்படுகிறார். அதன்பின்னர் ஆஸ்த்ரியாவில் தனியாக வசித்து வரும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு அவரது முன்னாள் மனைவி மூலம் ஒரு அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. முன்னாள் மனைவியின் சகோதரியை அவரது கணவரிடம் இருந்து காப்பாற்றுவது தான் அது.
ஜார்ஜியாவில் உள்ள ஒரு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தனது மனைவியின் சகோதரி, அவரது மகன், மகள் மூவரையும் காப்பாற்ற கிளம்புகிறார் கிறிஸ். முரட்டுத்தனமான அந்த ஜெயிலில் இருந்து வெளியேறும் போது எதிரிகளிடம் சிக்க, அவர்களிடம் இருந்து கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் குழு தப்பித்ததா இல்லையா என்பது தான் கதை. மொத்தமாக பார்த்தால் வழக்கமான தேய்ந்துப் போன ஒரு மொக்கையான கதை தான். ஆனால், அதன் மேக்கிங் தான் ரசிகர்களை மிரட்டியுள்ளது.
முதல் பத்து நிமிடங்களுக்கு மெதுவாக நகரும் திரைக்கதை அதன்பின்னர் விஸ்வரூபம் எடுக்கிறது. சிறையில் இருந்து தப்பிக்கும் 20 நிமிட ஆக்ஷன் காட்சியை சிங்கிள் ஷாட்டில் எடுத்து மிரட்டியுள்ளனர். வில்லன்களை விரட்டி துவம்சம் செய்வது, மெஷின் கன்களால் சுட்டுத் தள்ளுவதில் தொடங்கி, கார் சேசிங் காட்சிகள் வரும் போது ரசிகர்களை இமை மூடவிடாதபடி மிரட்டுகிறது. காரின் உள்ளே இருக்கும் கேமரா திடீரென டாப் ஆங்கிள் செல்கிறது, பின்னர் மறுபடியும் காரின் உள்ளே சென்று இன்னொரு பக்கமாக வெளியேறுகிறது.
என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் அங்கிருந்து பெரிய பேக்டரி, பின்னர் ரயில் ஏறி தப்பிக்கும் சண்டைக் காட்சி என ஆச்சரியத்துக்கும் மேல் பல ஆச்சரியங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் பாகத்தில் 12 நிமிடங்களுக்கு சிங்கிள் ஷாட் வைத்து மிரட்டிய இயக்குநர், இப்போது அதையும் விட ஒருபடி மேலே சென்றுவிட்டார். அன்லிமிட்டடாக ஆக்ஷன் ட்ரீட் கொடுத்து மிரட்டிவிட்டு கதையில் கவனம் செலுத்தவில்லை. ஆனாலும் படம் பார்க்க அலுப்புத்தட்டாத வகையில் மேக்கிங் உள்ளது.
அதேபோல், ஆக்ஷன் அதகளம் என்றாலும் அதில் லாஜிக்கும் சுத்தமாக கிடையாது. படம் தொடங்கியது முதல் இறுதிவரை சேஸிங், துப்பாக்கிச் சண்டை, கத்திக் குத்து என சம்பவங்கள் மட்டுமே உள்ளன. சிங்கிள் ஷாட் காட்சியமைப்பில் மட்டுமே இயக்குநர் சாம் ஹார்க்ரேவ் அதிகம் உழைத்துள்ளார். மற்ற இடங்களில் திரைக்கதையின் வேகம் திடீரென ஸ்பீடு பிரேக்கில் ஏறி இறங்கியதைப் போல உள்ளது. இத்தனை சாகசங்களும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் செய்வதால் மட்டுமே ரசிக்கவும் முடிகிறது.
இப்படத்தின் இறுதியில் 3ம் பாகத்துக்கான லீட் வைத்து முடித்துள்ளார் இயக்குநர். அதனால், அடுத்த பாகத்தில் இன்னும் தரமான சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது. ஆக்ஷன் சினிமா ரசிகராக இருந்தால் எதைப்பற்றியும் யோசிக்காமல் தாராளமாக பார்த்து ரசிக்க வேண்டிய படம் எக்ஸ்ட்ராக்ஷன் 2. நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள எக்ஸ்ட்ராக்ஷன் ஓடிடி ரசிகர்களுக்கான ரியல் ஆக்ஷன் கொண்டாட்டம்.