சென்னை: Indian 2 shooting (இந்தியன் 2 ஷூட்டிங்) இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது நிறைவடைகிறது என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் பணிகள் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு முழுவீச்சில் ஷுட்டிங் தொடங்கியபோது படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டது.
விக்ரம் மெகா ஹிட்: இப்படிப்பட்ட சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமல் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து அப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட்டோடு கமலுக்கு நல்ல புரிதல் உண்டானது. அதன் விளைவாக இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ரெட் ஜெயண்ட் நிறுவனம் முன் வந்தது. இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
மும்முரமான ஷூட்டிங்: சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து தைவான், தென் ஆப்பிரிக்காவில் ஷூட்டிங் நடந்தது. தென் ஆப்பிரிக்காவில் ரயில் விபத்து தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனையடுத்து சென்னையிலும், சூரத்திலும் ஷூட்டிங் நடந்ததாக கூறப்பட்டது.
வசந்தபாலன் என்ட்ரி: இவற்றில் சூரத்தில் நடந்த ஷூட்டிங்கை ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து வெயில், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபல இயக்குநராக வலம் வரும் வசந்தபாலன் இயக்கினார். விறுவிறுப்பாக நடந்த சூரத் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கமல் ஹாசனுக்கான போர்ஷனையும் விரைவில் முடிக்க ஷங்கர் திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
எப்போது முடிகிறது ஷூட்டிங்: இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தொடங்கிவிட்டதாகவும் ஜூலை மாதம் இரண்டாம் தேதியிலிருந்து நான்காம் தேதிக்குள் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும் என்று இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே வயதான கதாபாத்திரத்திற்கான மேக்கப் போடுவதற்கு மொத்தம் நான்கு மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றும், அந்த மேக்கப் ஆறு மணி நேரம் மட்டுமே இருக்கும் என்பதால் அதற்குள் காட்சிகளை படமாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறப்பட்டது.
சிலாகித்த ஆண்டவரின் ரசிகர்கள்: அதுமட்டுமின்றி அந்த மேக்கப் போட்டிருக்கும்போது கமல் ஹாசனால் திட உணவு சாப்பிட முடியாது என்றும் அதன் காரணமாக திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்கிறார் என்றும் பேச்சு எழுந்தது. இதனை கேள்விப்பட்ட கமல் ஹாசன் ரசிகர்கள் இந்த வயதிலும் ஆண்டவர் எப்படி உழைக்கிறார் என சமூக வலைதளங்களில் சிலாகித்தது குறிப்பிடத்தக்கது.