சென்னை: Naa Ready (நா ரெடி) லியோ படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி பாடலின் வரிகளை கேட்ட ரசிகர்கள் லியோ படம் எல்சியூவில் வருவது கன்ஃபார்ம்தான் என கூறிவருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய்யும், லோகேஷ் கனகராஜும் இணைந்திருப்பதால் நிச்சயம் இந்தப் படமும் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துவருகின்றனர். அதுமட்டுமின்றி எவ்வளவு வசூல் செய்யும் என்ற கணக்கையும் ரசிகர்கள் போட ஆரம்பித்திருக்கின்றனர். அந்த அளவு லோகேஷ் – விஜய் கூட்டணி மீது தங்களது நம்பிக்கையை வைத்திருக்கின்றனர்.
அசத்தும் பிஸ்னெஸ்: படத்தின் ஷூட்டிங் முடிய இன்னும் பத்து நாட்கள் இருப்பதாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்புதான் படத்தில் 2000 டான்ஸர்களுடன் விஜய் ஆடும் ஒரு பாடலுக்கான ஷூட்டிங் சென்னை ஆதித்யராம் ஸ்டூடியோவில் முடிந்தது. அந்தப் பாடலில் பத்து வருடங்களுக்கு முன்பு விஜய் எப்படி இருந்தாரோ அப்படி இருப்பார் என தயாரிப்பாளர் லலித்தும் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
விஜய் பிறந்தநாள்: இந்தச் சூழலில் விஜய்யின் 49ஆவது பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அதனையொட்டி அன்றைய தினம் லியோ படத்திலிருந்து என்ன மாதிரியான அப்டேட் வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி என்ற பாடல் விஜய் பிறந்தநாளுக்கு வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
பாடல் ப்ரோமோ: இந்நிலையில் நா ரெடி பாடலின் ப்ரோமோ இன்று மாலை வெளியாகியிருக்கிறது. பாடலை விஜய்யும், அனிருத்தும் பாடியிருக்கிறார்கள். குறிப்பாக இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய் என்ற வாசகத்தை ப்ரோமோவில் இடம் பெற செய்தது விண்டேஜ் விஜய்யை ரசிகர்களுக்கு நினைவுப்படுத்தியது. பாடலின் ப்ரொமோ ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
எல்சியூவில் லியோ: ‘நா ரெடிதா வரவா அண்ணன் நா இறங்கி வரவா தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா எவன் தடுத்தாலும் என் ரூட்டு மாறாதப்பா’என பாடல் தொடங்குவது ப்ரோமோவை பார்க்கும்போது உறுதி செய்ய முடிகிறது. இதனையடுத்து வரிகளை கவனித்த ரசிகர்கள் லியோ நிச்சயம் எல்சியூவில்தான் வருமென்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.
என்ன காரணம்: அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் சந்தனம் (விஜய் சேதுபதி), ரோலக்ஸ் (சூர்யா) ஆகிய இருவருமே தங்களது உடம்பில் தேள் உருவத்தை பச்சை குத்தியிருப்பார்கள். மேலும் அதுதான் ரோலக்ஸ் கேங்கின் சின்னமாகவும் படத்தில் காட்டப்பட்டிருக்கும். அதேபோல் இந்தப் படத்தின் பெயர் லியோ.
லியோ என்றால் சிங்கம் என்ற இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. எனவே பாடல் வரிகளில் தேள் கொடுக்கு (ரோலக்ஸ்), சிங்கத்தை (லியோ)சீண்டாதப்பா என்ற வரியின் மூலம் தன்னை சீண்ட வேண்டாம் என ரோலக்ஸை லியோ எச்சரிக்கிறார் என தளபதி ரசிகர்கள் வேற லெவல் டீட்டெயிலிங்கோடு சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.