சென்னை: சின்னத்திரையின் அசத்தப் போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ரோபோ சங்கர்.
இந்த நிகழ்ச்சிகள் இவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
இதனிடையே உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார். 5 மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்ததாகவும் சமீபத்தில் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
கறிக்குழம்பை வெளுத்துக்கட்டும் ரோபோ சங்கர்: நடிகர் ரோபோ சங்கர், அசத்த போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர். தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது, சினிமா வாய்ப்புகளையும் பெற்றார். இவரது இயல்பான மற்றும் டைமிங் காமெடி சென்சால் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைத்த நிலையில், முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து முன்னணி காமெடியனாக வலம் வந்தார்.
விஜய் டிவியிலும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக தோன்றி, ரசிகர்களை கவர்ந்து வந்தார் ரோபோ சங்கர். சமூக வலைதளங்களிலும் இவர் பிசியாக இருந்தார். தன்னுடைய மகள் இந்த்ரஜாவுடன் இணைந்து அடுத்தடுத்த ரீல்ஸ் வீடியோக்களை இவர் வெளியிட்டு வந்தார். இவர்கள் இருவரின் இந்த வீடியோக்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக உடல் இளைத்து அதிகமாக பேசப்படும் நபராக மாறியுள்ளார் ரோபோ சங்கர்.
தவறான பழக்க வழக்கங்களால்தான் தன்னுடைய உடல் இந்த அளவிற்கு மோசமானது என்று தன்னுடைய பேட்டிகளில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 5 மாதங்கள் தொடர்ந்து படுத்த படுக்கையாக இருந்ததாகவும் சாவின் விளிம்பிற்கு சென்றுவிட்டு திரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம்கூட தனக்கு தலைத்தூக்கியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் கறிக்குழம்பை வெளுத்துக்கட்டும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மிகுந்த உடல் இளைத்து காணப்பட்டாலும் சாப்பாட்டு பிரியரான ரோபோ சங்கர், இந்த வீடியோவின் தன்னுடைய மனைவி பிரியங்கா பரிமாற சாப்பிடுவதாக காணப்படுகிறது. இதன்மூலம் இவரது உடல்நலம் மீண்டும் தேறி மீண்டும் படங்களில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிதான் மாரி படத்தில் நடிக்கும் வாய்ப்பை ரோபோ சங்கருக்கு பெற்றுத் தந்தது. தொடர்ந்து வேலைக்காரன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ரோபோ சங்கர், நல்ல உடல்நலத்துடன் மீண்டும் படங்களில் நடிக்கவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இதனிடையே விரைவில் அவரது மகள் இந்த்ரஜாவிற்கும் அவரது முறைமாமனுக்கும் திருமணம் நடத்தவும் ரோபோ சங்கர் திட்டமிட்டுள்ளார்.