மும்பை: Salman Khan (சல்மான் கான்) சல்மான் கான் பவுன்சர்களால் நாயை போல் தூக்கி வீசப்பட்டதாக பிரபல நடிகை ஹேமா ஷர்மா குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் என அழைக்கப்படுபவர் சல்மான் கான். இவருக்கென்று இந்தியா முழுவதும் ரசிகர்களாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் அவர் இப்போதும் எனர்ஜி குறையாமல் திரையில் வருவதை ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர். கடந்த 1988ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான சல்மான் கான் 90களில் மிகப்பெரிய ரவுண்டு வந்தார். அவருக்கு போட்டியாக ஷாருக் கான், கிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் சமகாலத்தில் இருந்தாலும் அதில் இப்போதுவரை நிலைத்திருக்கிறார் சல்மான் கான்.
திருமணம் இல்லை: சல்மானுக்கு இப்போது 57 வயது ஆகிறது. ஆனால் இன்றுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் ஐஸ்வர்யா ராயை காதலித்து வந்தார். அந்தக் காதல் பிரிவில் முடிந்தது. இதனையடுத்து பலருடன் இணைத்து சல்மான் கான் பேசப்பட்டாலும் அவருக்கு பெண்கள் மத்தியில் இன்னமும் ஒரு க்ரஷ் இருக்கிறது. இந்தச் சூழலில் பிரபல நடிகை ஹேமா ஷர்மா, சல்மான் கான் பவுன்சர்களால் நாயை போல் தூக்கி வீசப்பட்டேன் என கூறியிருக்கிறார்.
ஹேமா ஷர்மா பேட்டி: இதுகுறித்து அவர் பேசுகையில், “தபாங் 3 படத்தில் பணியாற்ற விரும்பி சல்மான் கானை சந்திக்க விரும்பினேன். மேலும் அதில் பணியாற்றுவதற்காக எல்லா முயற்சிகளையும் செய்தேன். ஒருவழியாக வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் நான் தோன்றிய காட்சியை சல்மான் கான் இல்லாமல் படமாக்கினார்கள். இதன் காரணமாக நான் ரொம்பவே ஏமாற்றமடைந்தேன். எனவே படப்பிடிப்பு முடிந்ததும் அவரை சந்திக்க விரும்பினேன்.
பலரை தொடர்புகொண்டேன்: சல்மான் கானை சந்திப்பதற்காகவும், அப்போது ஒரே ஒரு புகைப்படத்தை அவருடன் எடுத்துக்கொள்வதற்காகவும் குறைந்தபட்சம் 50 பேரிடமாவது பேசியிருப்பேன். ஒருகட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பண்டிட் ஜனார்தனை தொடர்புகொண்டு சல்மான் கானை சந்திக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தேன். நிச்சயம் அது நடக்கும் என அவர் எனக்கு உறுதியளித்தார்.
அந்த நாள்: அதற்கு அடுத்ததாக சல்மான் கானை சந்திக்க நாங்கள் சென்றோம். அப்போது நான் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டேன் என்று சொல்ல முடியாது. அவருடன் ஒரே ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் சல்மானின் பௌன்சர்களால் ஒரு நாயை போல தூக்கி வீசப்பட்டேன். ஜனார்தனும் அவர்களால் அப்படித்தான் நடத்தப்பட்டார்.
10 நாட்கள் தூங்கவில்லை: கிட்டத்தட்ட 100 பேர் முன்பு நான் அவமானப்படுத்தப்பட்டேன். அதன் பிறகு என்னால் பத்து நாட்கள் தூங்க முடியவில்லை. அந்த சம்பவம் நடந்த அன்று அந்த இடத்தில் சல்மான் கான் இல்லைதான். இருப்பினும் அந்த இடத்துக்கு அருகில்தான் அவர் இருந்தார். அவர் உடனடியாக தலையிட்டு அந்த நிலைமையை சுமூகமாக கையாண்டிருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை” என்றார்.
பௌன்சர்களின் அராஜகம்: முன்னொரு காலத்தில் நடிகர்களை அணுகுவது ரசிகர்களுக்கு ரொம்பவே எளிதாக இருந்தது. ஆனால் பௌன்சர்கள் கலாசாரம் சினிமாவில் பெருகிவிட்டதை அடுத்து நடிகரை அருகில் பார்ப்பது கிட்டத்தட்ட கடவுளை நேரில் பார்ப்பது போன்ற ஒரு நிலைமை உருவாகியிருக்கிறது. பௌன்சர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமையை கொஞ்சம் அதிகமாகவே இஷ்டத்துக்கு பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீப காலமாகவே அதிகரித்திருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே சல்மானின் பௌன்சர்களுடைய நடவடிக்கை இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.