சான்பிரான்சிஸ்கோ:வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய, ‘டைட்டானிக்’ பயணியர் கப்பலின் பாகங்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட, ‘டைட்டன்’ என பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளது. அதனுடன் தொடர்பு கொள்ளும் முயற்சி நடந்து வருகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, பிரமாண்ட டைட்டானிக் கப்பல், 1912ல் தன் முதல் பயணத்தை மேற்கொண்டது. பிரிட்டனின் சவுத்ஹாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இந்தக் கப்பல் புறப்பட்டது.
ஆனால், 1912, ஏப்., 15ல், வடக்கு அட்லாண்டிக் கடலில், பனிப்பாறையில் மோதி இந்தக் கப்பல் மூழ்கியது. இதில் பயணம் செய்த, 2,200க்கும் மேற்பட்ட பயணியர் மற்றும் கப்பல் ஊழியர்களில், 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடல் விபத்துகளில் மிகவும் மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஓஷன்கேட்’ என்ற நிறுவனம், ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை ஆய்வு செய்வதற்காக, இந்த நிறுவனம் சார்பில், ஆழ்கடல் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டைட்டன் என பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கி கப்பலில், ஐந்து நிபுணர்கள் இந்தப் பயணத்தை துவக்கினர்.
இந்த நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் செல்லும்போது, அதற்கு உதவுவதற்காக, மற்றொரு கப்பல் கடல் மேல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில், டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடல் மட்டத்தில் இருந்து, 3.8 கி.மீ., ஆழத்துக்கு சென்ற நிலையில், அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் செயின்ட் ஜான்ஸ் நகரில் இருந்து, 700 கி.மீ., தூரத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல் இருந்தபோது, அது மாயமானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த நீர்மூழ்கி கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
கடந்த, 1912ல் கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்கள், அடுத்த சில ஆண்டுகள் முழுதுமாக சிதிலமடைந்து விடும் என, கணிக்கப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகளில் அந்தக் கப்பல் எந்தளவுக்கு சேதம் அடைந்துள்ளது. அதனால், கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆராய்வதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்று கப்பல்களின் சேதமடைந்த பாகங்களை மட்டும் உண்டு உயிர்வாழும் உயிரினங்கள் குறித்தும் ஆராய திட்டமிடப்பட்டு, இந்த நீர்மூழ்கி கப்பல் பயணம் துவக்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்