2023-ம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
இந்த விழாவும், விஜய்யின் அரசியல் வருகையும்தான் சினிமா, அரசியல் என அனைத்திலும் டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறது. இதையடுத்து இது விஜய்யின் அரசியல் வருகையை உறுதிப்படுத்துகிறது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய்யின் ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ போன்ற படங்களை இயக்கியவரும், சமீபகாலமாக பா.ஜ.க, இந்துத்துவா சித்தாந்தங்களுக்கு ஆதரவாகப் பேசிவருபவருமான இயக்குநர் பேரரசு, விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரை கூறியது குறித்தும் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விழா ஒன்றில் பேசியுள்ள பேரரசு, “விஜய் மாணவர்களுக்குப் பரிசுகள், ஊக்கத்தொகை கொடுத்ததெல்லாம் பெரிய விஷயமில்லை. மக்களும், மாணவர்களும் படிக்க வேண்டும், ஓட்டுக்குக் காசு வாங்கக்கூடாது என்று நல்ல அறிவுரைகளை அவர் சொல்லியிருப்பதைத்தான் பெரிய விஷயமாக, அடுத்த தலைமுறைக்குத் தேவையான விஷயமாக நான் கருதுகிறேன். மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் நூறு ஆசிரியர்கள் பேச்சைக் கேட்பதை விட நடிகர்கள் சொல்வதைத்தான் கேட்கிறார்கள்.
அந்த வகையில் குடும்பங்களுக்கும், குழந்தைகளுக்கும் விருப்பமான நடிகராக இருக்கும் விஜய் இப்படி நல்ல அறிவுரைகளை இளம் தலைமுறைக்குச் சொல்வது வரவேற்கத்தக்கது. எம்.ஜி.ஆரும் இதைத்தான் செய்து சாதித்தார். விஜய்யும் அதே பாணியைத்தான் பின்பற்றுகிறார்.
இளம் தலைமுறை மனதில் படிப்பு முக்கியம் என்றும் ஓட்டுக்குப் பணம் வாங்குவது தவறு என்றும் கூறியிருப்பது சிறப்பான விஷயம். அரசியலின் எல்லா குற்றங்களுக்கும் காரணம் ‘ஓட்டுக்குப் பணம் வாங்குவதும், கொடுப்பதும்தான்’. இந்த நல்ல அறிவுரையை விஜய் இளம் தலைமுறைகளின் மனதில் அழகாகப் பதிய வைத்துள்ளார். இதற்காகவே அவரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.