நடைபயிற்சி நல்லது தான். அதிகாலையில் புத்துணர்வுடன் வேகநடை பயிலும் போது உடலும், மனமும் லேசாகும். இந்த வாய்ப்பு பெரும்பாலான பெண்களுக்கு கிடைப்பதில்லை. உடற்பயிற்சி நிலையங்களுக்கு சென்றால் கருவிகள் மூலம் பயிற்சி பெற்று உடலை நேர்த்தியாக்கலாம். அதற்கு நேரமும் நிதியும் ஒதுக்கவேண்டும். ஏழை எளியோரின் வீட்டிலேயே செய்யக்கூடிய இலகுவான பயிற்சியாக யோகாசனம் உள்ளது தான் சிறப்பு.
இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினம். பெரும்பாலான மையங்களில் ஒருவார கால இலவச பயிற்சி, குறிப்பாக பெண்களுக்காகவே நடத்தப்படுகிறது. அதை கற்றுக் கொண்டால் மனஅழுத்தத்தில் விடுபட்டு சந்தோஷமாக வாழலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
அவர்கள் கூறியதாவது:
அழகின் ரகசியவழி காட்டும் யோகா
நாகராணி நாச்சியார், இயற்கை நல்வாழ்வு மருத்துவர், மதுரை அரசு மருத்துவமனை: ஐந்து வயது முதல் ஆயுள் வரை யோகா பல்வேறு நன்மைகளை செய்கிறது. விடலை பருவத்தில் 10 முதல் 13 வயதுக்குள் பூப்படைகின்றனர். மனப்பக்குவம் இல்லாத நிலையில் அதிக ரத்தப்போக்கால் உடலளவில் பாதிக்கப்படுகின்றனர். வலியை சந்திக்கும் போது மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஹார்மோன் சமநிலை தவறுகிறது. ஆரம்ப காலகட்டத்திலேயே இத்தகைய பிரச்னைகளை சந்திக்காமல் கடந்து செல்வதற்கு யோகா உதவுகிறது.
கர்ப்பகால யோகா
கர்ப்பகாலத்தில் வாந்தி, தலைசுற்றல், கை,கால்வீக்கம், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயை தவிர்க்க முடியாது. ஆரோக்கிய உணவுகள் சாப்பிட்டாலும் யோகாவின் பங்கு அதிகம். கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான உடல், மனநிலையை தருகிறது. மனநிலையை உற்சாகமாக்கி சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது. மதுரை அரசு மருத்துமவனை கர்ப்பிணிகளுக்கு யோகா பிரத்யேக பயிற்சி அளிக்கிறோம். குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பை சுருங்கி ஆரோக்கியமாக வாழவும் சிறுநீர்ப்பை, குடலின் வேலைகளை சரியாக செய்யவும் யோகா உதவுகிறது. இதற்கென பிரத்யேக யோகா உள்ளது. இனப்பெருக்க மண்டலத்தை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
‘
மெனோபாஸ்’ பிரச்னைக்கு தீர்வு
ஒரே நேரத்தில் பலவித வேலைகளை செய்ய வேண்டியது பெண்களின் கடமையாக உள்ளது. பொறுப்புகளை தலையில் சுமத்தும் போது இயற்கையாகவே உடல், மனச்சோர்வு ஏற்படும். 40 வயதுக்கு மேல் ‘மெனோபாஸ்’ அறிகுறி வரும் போது ஹார்மோன் சமநிலை
மாற்றம் ஆரோக்கியத்தை தடுமாறச் செய்யும். வியர்த்து கொட்டுதல், மனநிலையில் திடீர் மாற்றம், கோபம், எரிச்சல், உடல் சூடாகுதல் போன்ற பிரச்னைகள் வரும். இதை தடுப்பதற்கும் சரிசெய்வதற்கும் யோகா பயன்படும்.40 வயதுக்கு மேல் உடல் எடை அதிகரிக்காமல் வீட்டிலேயே எளிமையாக யோகா பயிற்சியில் ஈடுபடலாம். இதனால் ரத்தஓட்டம் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறிய நோய்கள் முதல் பெரிய நோய்கள் வராமல் தற்காத்து கொள்ள முடியும்.
ஐம்பதிலும் ‘டேக் இட் ஈசி’
50 முதல் 60 வயது வரை எலும்பு தேய்மானம், வலி தொந்தரவு ஏற்படும். ரத்தக்குழாய்கள் சுருங்கும். இதற்கும் யோகா செய்வது செய்வது நல்லது. மூட்டு இறுக்கத்தை குறைத்து நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து வலி, மாத்திரை இல்லாமல் வாழ முடியும். சர்க்கரைநோய், ரத்தக்கொதிப்பு நோய்கள் ரொம்பவும் பாதிக்காமல் உதவும்.எந்த வயதிலும் அழகைப் பற்றிய உணர்வு அதிகமாக இருக்கும். தோலை பளபளப்பாக்கும். வயது ஏறாமல் இளமையான தோற்றத்துடன் இருப்பதற்கு உதவும். ஒவ்வொரு காலகட்டத்திலும் செய்யக்கூடிய பயிற்சிகள் உள்ளன. நின்ற நிலை, குப்புற படுத்த நிலை, மல்லாக்கபடுத்த நிலை, உட்கார்ந்த நிலை பயிற்சிகள் உள்ளன.மல்லாக்க படுத்த நிலை பயிற்சிகள் வயிற்றுக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கும். இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்னை வராமல் தடுக்கலாம். தொடை, அடிவயிற்று பகுதியில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும். தினமும் 20 நிமிடம் முதல் 60 நிமிடம் செய்தால் ஆயுள் முழுவதும் உடல்நலம் நன்றாக இருக்கும்.
பெண்களுக்கு யோகா பிடிக்கும்
ரவிச்சந்திரன், உதவி பேராசிரியர், காந்தி கிராம் கிராமிய பல்கலை, திண்டுக்கல்: அனைத்து வயதினரும் யோகா செய்யலாம் என்றாலும் பூப்படையாத 13 வயது வரையிலான சிறுமிகள் ஆரம்ப கட்டத்தில் சர்வாங்காசனம், மயூராசனம், சிரசாசனம் செய்யக்கூடாது. 13 வயதுக்கு மேல் இந்த பயிற்சிகளை செய்தால் இனப்பெருக்க உறுப்புகள் நன்கு பலப்படும். அதுவரை நின்ற நிலை, அமர்ந்த நிலை ஆசனங்களை அதிகமாக பயிற்சி செய்யலாம். பூப்பெய்த பின் சர்வாங்காசனம் போன்ற பயிற்சிகளை செய்தால் மாதவிடாய் சீராக வரும். மனச்சோர்வு வராமல் பாதுகாக்கும். சுகப்பிரசவத்திற்கு வழிகாட்டும். உண்மையைச் சொல்வதென்றால் ஆண்களை விட பெண்களுக்கு தான் பொருத்தமாக உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பாவில் 70 சதவீத பெண்கள் தான் யோகாசனத்தை பின்பற்றுகின்றனர்.
ராஜஉறுப்புகளை பாதுகாக்கும்
இருதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையத்தை ராஜஉறுப்புகள் என்கிறோம். வலப்புறத்தில் மூன்றடுக்குகளும் இடப்புறத்தில் இரண்டடுக்குகளும் கொண்டது நுரையீரல். நவீன வாழ்க்கையில் மூச்சை ஆழ்ந்து எடுத்து யாரும் சுவாசிப்பதில்லை. நுரையீரலின் அடிப்பகுதி வரை சுவாசித்தால் நிறைய ஆக்சிஜன் ரத்தம் வழியாக செல்லும். நுரையீரலின் திறனை அதிகப்படுத்தினாலே பலநோய்கள் நம்மிடம் எட்டி கூட பார்க்காது. நின்ற நிலையிலான பனைமர ஆசனம் என்று சொல்லப்படும் தாளாசனம், குனிந்த நிலையில் பாதஹஸ்தாசனம், திரிகோணாசனம், பத்மாசனம் நுரையீரலுக்கு சிறந்த பயிற்சி தரும். புஜங்காசனம், சலபாசனம், தனுராசனம் போன்றவை உடலை செம்மைப்
படுத்த உதவும்.
அதிகாலை யோகா அழகுதரும்
அதிகாலையில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும் வேளையில் யோகாசனம் செய்வதே நல்லது. நடைபயிற்சியில் உடல் தசைகள் வலுவடையும். யோகா பயிற்சியில் உள்ளுறுப்புகள் வலுவடையும். அகச்சுரப்பிகளை துாண்டி செயல்படுத்தும். தானாக இயங்காத தசைகளையும் யோகா செயல்படுத்தும். வீட்டில் ஏதாவது ஒரு விரிப்பின் மேல் யோகாசனம் செய்யலாம். ஆசனம், பிராணயாமம் என தினமும் 40 நிமிடம் செய்யலாம். காலையில் செய்ய முடியாதவர்கள் மாலையில் பயிற்சி செய்யலாம். இரவுநேர வேலை பார்ப்பவர்கள் உறங்கி விழித்த பின் தான் யோகா பயிற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்