`கடந்த ஒரு வருட டாஸ்மாக் பார் உரிமைப் பணம் ஸ்டாலின் குடும்பத்துக்குச் சென்று சேரவில்லை, அதை மீட்க செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார்’ என்று முன்னாள் மேயரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக அரசைக் கண்டித்து இன்று மதுரையில் அதிமுக நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா பேசும்போது, “அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டம் செய்தால் ஊதியத்தை கட் செய்து விடுவோம் என்று அரசு அவர்களை மிரட்டி வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் பத்தாயிரம் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு மூன்று நாள்கள் ஓய்வு போதும். ஆனால், மூன்று மாதம் ஓய்வு என்று மருத்துவமனை தரப்பில் கூறியிருக்கின்றனர். ஏனென்றால் செந்தில் பாலாஜியிடம் யாரும் தகவல் பெறக் கூடாது என்ற காரணம்தான்.
கடந்த ஒரு வருட டாஸ்மாக் பார் உரிமை பணம் ஸ்டாலின் குடும்பத்துக்குச் சென்று அடையவில்லை, அதை மீட்க செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது. ஆனால், கலைஞர் நூலகம், கலைஞர் கோட்டம், கலைஞர் மருத்துவமனை என்று எல்லாவற்றுக்கும் கலைஞர் பெயர் வைக்கப்பட்டு வருகிறது.
ஊழலுக்காக கலைக்கப்பட்டது கருணாநிதி ஆட்சி, கருணாநிதி பெயர் வைக்கப்படுவதை மக்கள் யாரும் விரும்பவில்லை. ஒரே ஆண்டில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே அரசாணையில் வைக்கப்பட்ட கருணாநிதிபெயர்கள் எல்லாம் திரும்ப பெறப்படும். சாராய சாவுக்கு ஸ்டாலின்தான் முழு பொறுப்பு. வரும் ஆகஸ்ட் 20- ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் அதிமுக மாநாட்டுக்கு இந்த ஆர்ப்பாட்டமே முன்னோடியாக இருக்கும்” என்றார்.