அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அமெரிக்காவுக்கு 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடியை, நியூயார்க் ஜான் எப். கென்னடி விமான நிலையத்தில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகளும், இந்தியத் தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.
விமானநிலையத்தின் வெளியே காத்திருந்த ஏராளமான இந்தியர்கள் பிரதமருக்கு மூவர்ணக் கொடிகளுடன் வரவேற்புத் தெரிவித்தனர். சிலர் ஆடிப்பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
திரண்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை சந்தித்து கைகுலுக்கிய மோடி நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்க சென்றார். அங்கும் பெருமளவுக்கு இந்தியர்கள் திரண்டு வந்து மோடியை சந்தித்து வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.
தொழிலதிபர் மற்றும் டிவிட்டர் நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் பிரதமர் மோடி தங்கியுள்ள ஓட்டலுக்கு வந்து சந்தித்துப் பேசினார். தாம் அடுத்த ஆண்டு இந்தியாவுக்குவர விரும்புவதாக மோடியிடம் எலன் மஸ்க் தெரிவித்தார். மோடி மிகச் சிறந்த முறையில் கலந்துரையாடியதாகவும், தாம் மோடியின் ரசிகன் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் பிரபல கல்வியாளர்களும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரும் பிரதமர் மோடியை ஓட்டலில் சந்தித்துப் பேசினர்.
இன்று ஐநா.சபை தலைமையகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியபின், சர்வதேச யோகாசன நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் பங்கேற்கிறார். பிரதமருடன் 180 நாடுகளின் பிரதிநிதிகள் முக்கியப் பிரமுகர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.