ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபைச் சமவாயம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய சர்வதேச நெறிகள், நியமங்கள் அத்துடன் மிகச் சிறந்த செயல்முறைகள் என்பவற்றுக்குப் பயன்கொடுப்பதற்கும், சுயாதீனமான ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும்,சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தலுடன் தொடர்புபட்ட தவறுகள் மற்றும் இணைந்த தவறுகளைக் கண்டுபிடிப்பது போன்ற நோக்கத்தில் கொண்டுவரப்படும் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தில் தனியார் துறை நிறுவனத்தை குற்றவாளியாக்கும் விதிகள் உள்ளதாகவும், இலஞ்சம் வாங்கிய குற்றச்செயலில் ஈடுபட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வரலாற்றில் முதல் தடவையாக தனியார் துறையினரையும் இதில் உள்ளடக்கியிருப்பதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கமைய 1995ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத்தின் 5ஆம் பிரிவின் வரைவிலக்கணத்தில் கூறப்பட்டவாறு குறித்துரைக்கப்பட்ட தொழில் முயற்சிகள் இதில் உள்ளடங்கும்.
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தலைமையில் நேற்று (20) கூடியபோதே இவ்விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
பொலிஸ் அதிகாரிகளுடன் மட்டுப்படுத்தப்படாமல் விசாரணைகளுக்காக குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இணைத்துக் கொள்வதற்கும் இந்தச் சட்டமூலத்தில் ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
உத்தேச சட்டமூலத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இதில் உள்ள சில சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒரு சனநாயக சமூகத்தின் பொது நல்வாழ்வின் நீதியான தேவைப்பாடுகளை எதிர்கொள்வதற்கான இலஞ்சத்தையும் ஊழலையும் தடுத்தலும் அடியோடு அழித்தலும், ஆளுகையில் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல், ஆளுகையின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தலும் பொறுப்புக்கூற வேண்டியமையை அதிகரித்தலும் இந்தச் சட்டமூலத்தின் நோக்கங்களாகும்.
அரசாங்கம் தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்தலும் ஊழலை அடியோடு அழிப்பதற்குப் பொதுமக்களின் பங்குபற்றுகையை வலுப்படுத்தலும், அதன்மீது சுமத்தப்பட்ட பொறுப்புடைமைகளை நிறைவேற்றுவதற்கும் சுயாதீனமான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தலும் இதன் நோக்கங்களில் உள்ளடங்குகின்றன.
இலஞ்சம், ஊழல், சொத்துக்களும் பொறுப்புக்களும் தொடர்பான தவறுகள் மற்றும் இணைந்த தவறுகள் என்பன பற்றிப் பூர்வாங்க விசாரணைகளையும் புலனாய்வுகளையும் நடாத்துவதற்கும் அவற்றுக்கெதிராகக் குற்றவழக்குத் தொடுப்பதற்கும் சொல்லப்பட்ட ஆணைக்குழுவுக்குப் பணிப்பாணை விடுத்தல், இலஞசம் மற்றும் ஊழலைத் தடுத்தல் பற்றி கல்விசார் செயற்பாடுகளை நடாத்துதல், ஒருங்கிணைத்தல், பகிரங்க உத்தியோகத்தர்கள் கள்ளமான முறையில் செல்வந்தராவதைத் தடுப்பதற்கான சொத்துக்களையும், பொறுப்புக்களையும் வெளிப்படுத்துவதற்கான பயனுள்ள முறைமையொன்றை அறிமுகப்படுத்தல், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதில் முகவராண்மைகளுக்கிடையிலான ஒத்துழைப்பையும் சர்வதேச உடனுழைப்பையும் ஊக்குவித்தல், இலங்கையானது திறத்தவரொருவராகவுள்ள ஊழலுக் கெதிரான ஐக்கிய நாடுகள் சபைச் சமவாயத்தின் கீழும் ஊழல்தடுப்புத் தொடர்பான வேறேதேனும் சர்வதேச சமவாயத்தின்கீழுமான கடப்பாடுகளுக்குப் பயன் கொடுத்தலும் இலங்கையில் நேர்மைக் கலாசாரத்தை நிலைநாட்டுவதற்கென சர்வதேச நியமங்களையும் மிக்சிறந்த செல்முறைகளை ஏற்றங்கீகாரமளித்தலும் இந்தச் சட்டமூலத்தின் நோக்கங்களாகும்.
இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ், கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ தலதா அத்துகோரல, கௌரவ மதுர விதானகே, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, கௌரவ ஜயந்த வீரசிங்க, கௌரவ வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.