தொழில்நுட்ப ஜாம்பவானாக விளங்கும் ஜோஹோ நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் உள்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 90 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, கடந்த ஆண்டு அதன் மொத்த வருவாய் ஒரு பில்லியன் டாலர்களைத் தாண்டியது.
இந்நிலையில் ஜோஹோ நிறுவனம், இஸ்ரேல் – ஆசியா சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்புடன் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. துபாயில் உள்ள இஸ்ரேலின் துணைத் தூதரகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இஸ்ரேல் – ஆசியா சேம்பர் ஆஃப் காமர்ஸ் உடனான கூட்டணி நிறுவனங்கள், ஜோஹோவின் 55 க்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையிலான வணிக ஆப் பயன்பாடுகளையும் தொழில் நிபுணத்துவ சேவைகளையும் பெறும்.
ஜோஹோ மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்திய மேலாளர் பிரேமானந்த் வேலுமணி கூறுகையில், “துபாயில் உள்ள இஸ்ரேல் அரசின் துணைத் தூதரகத்துடனும், இஸ்ரேல்-ஆசியா வர்த்தக சம்மேளனத்துடனும் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உள்ளூர் வணிக சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சமூகங்களின் வளர்ச்சியை நாங்கள் ஆதரிக்கிறோம், எனவே இஸ்ரேலிய வணிக சுற்றுச்சூழல் அமைப்பில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளோம். மத்திய கிழக்கு நாடுகளில் ஜோஹோ நிறுவனத்தின் அதிக நன்மதிப்புகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் உள்ளது. அந்நாட்டின் உள்ளூர் வணிக நிறுவனங்களுக்கு சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என்றார்.
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் பாராட்டி, துபாயில் உள்ள இஸ்ரேல் அரசின் தூதரகத் தளபதி லிரோன் சாஸ்லான்ஸ்கி கூறுகையில், “ இந்த ஒப்பந்ந்தத்தை துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை புதிய சந்தைகள் மற்றும் வாய்ப்புகளுக்கான மைய இணைப்பு புள்ளிகளாக நாங்கள் பார்க்கிறோம், குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் இஸ்ரேலின் நிபுணத்துவம். ஜோஹோ மற்றும் இஸ்ரேல்-ஆசியா சேம்பர் ஆஃப் காமர்ஸ் –ன் ஒத்துழைப்பை நாங்கள் வாழ்த்துகிறோம், இது ஒரு முக்கியமான மைல்கல், மேலும் இது பல நன்மை பயக்கும் கூட்டணிகளின் ஆரம்பம் மட்டுமே என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.
இது குறித்து இஸ்ரேல் – ஆசிய வர்த்தக அமைப்பின் தலைவர் அனாட் பெர்ன்ஸ்டீன் ரீச் கூறுகையில், “இந்தியாவின் முன்னணி பிராண்டாக ஜோஹோ உள்ளது. அதனுடன் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் முக்கியத்துவமானது. எங்கள் வர்த்தக கூட்டணியில் உள்ள உறுப்பினர்களுக்கான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். ஜோஹோ இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.