உ.பி.,யில் சமாஜ்வாதி – ஆர்எல்டி கூட்டணியில் பிளவு: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் சேர அகிலேஷை வலியுறுத்தும் ஜெயந்த்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி (எஸ்பி)-ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) கூட்டணியில் பிளவு உருவாகிறது; மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, எஸ்பியின் அகிலேஷ்சிங் யாதவையும் சேர வலியுறுத்துகிறார்.

உத்தரப் பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த கட்சியாகக் கருதப்படுவது ஆர்எல்டி. இக்கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரன் ஆவார். இப்பகுதியில் அதிகமுள்ள ஜாட் சமூகம் மற்றும் விவசாயிகளின் ஆதரவு கட்சியாக ஆர்எல்டி விளங்குகிறது. கடந்த 2017 உ.பி சட்டப்பேரவை தேர்தல் முதல் அகிலேஷ்சிங் யாதவின் எஸ்.பி.யுடன் இணைந்து உபியில் ஆர்எல்டி தேர்தல்களில் போட்டியிடுகிறது. இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் மாறும் அரசியல் சூழலால், காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவது சரி என ஆர்எல்டி கருதுகிறது. இதற்கு காங்கிரஸின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக்கக் காங்கிரஸ் திட்டமிடுவது காரணமாகி விட்டது.

இது நடந்தால், உ.பியின் தலித் மற்றும் முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பார்கள் என்பது ஆர்எல்டியின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால், சமீபத்தில் முடிந்த உ.பி.,யின் உள்ளாட்சித் தேர்தலின் அதிருப்தியை காரணமாக்கி ஆர்எல்டி, சமாஜ்வாதியிடமிருந்து விலக விரும்புகிறது. இதன் பின்னணியில் காங்கிரஸுடன் இணைந்தால் ஆர்எல்டிக்கு மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், காங்கிரஸுடன் சமாஜ்வாதியும் இணைந்தால்தான் உபி.,யில் பாஜகவை வலுவாக எதிர்க்க முடியும் எனவும் ஆர்எல்டி கருதுகிறது. எனவே, சமாஜ்வாதியையும் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி அமைக்கும்படி ஆர்எல்டியின் தலைவர் ஜெயந்த் வலியுறுத்துவதாகத் தெரிந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் சமாஜ்வாதியின் செய்தித் தொடர்பாளரான ராஜேந்திர சவுத்ரி கூறும்போது, ”ஆர்எல்டியின் தலைவர் ஜெயந்த் சமீபத்தில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களாக மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தியை சந்தித்திருந்தார். இதற்குபின் ஆர்எல்டியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கி உள்ளது. நாம் கடந்த 2017 உபி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைந்து 105 தொகுதிகள் ஒதுக்கினோம். இந்த வாய்ப்பை அக்கட்சி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, வரும் 23இல் பாட்னாவில் எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு பின் காங்கிரஸுடன் சேர்வதன் மீது முடிவு எடுப்போம்” எனத் தெரிவித்தார்.

உ.பியில் பாஜக அதிக செல்வாக்கு பெற எதிர்கட்சிகள் ஒன்றுபடாத நிலையே காரணம். இதனால், எவரும் ஒன்றுசேராதபடி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதியுடன் சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் மீதும் சில நிர்பந்தங்களை பாஜக வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி காங்கிரஸுடன் இணைவது கடினம் எனவும். முடிவுகளுக்குப் பின் வேண்டுமானால் அக்கட்சி ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.