எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது.. சென்னை மக்களே உருகுவே நிலையை பாருங்கள்! தவிச்ச வாய்க்கு கொடுமை

மான்டிவீடியோ (உருகுவே): ஒரு நாட்டில் மக்கள் தண்ணீரையே ரேஷனில் அளந்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதுவும் வெறும் 2லிட்டர் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்த நாட்டில் என்று கேட்கிறீர்களா.. உருகுவே நாட்டில் தான் அப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

கடல்பரப்பு வெப்பநிலையானது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு [ஏழு முதல் 24 மாதங்கள் வரை] ,சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும் நிகழ்வு [அரை டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்]. இந்நிகழ்வு சராசரியாக ஒவ்வொரு ஐந்து ஆண்டுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த எல் லினோ நிலை காரணமாக ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் சில நாடுகளில் அதீதமான மழையும், சில நாடுகளில் மழையே பெய்யாமல் மோசமான வறட்சியும் ஏற்படுகிறது.

கால நிலை மாற்றத்திற்கு இந்தியா உள்பட உலகின் எந்த நாடும் தப்பவில்லை. குளிர்காலம், வெயில் காலம், வசந்த காலம் என மூன்று காலங்கள் இருக்கின்றன. இதில் கூட எல் லினோ மாற்றத்தால் அதீத வறட்சி, அதிக வெப்பம், அதீத மழை ஏற்படுகிறது. சென்னையில் 25 வருடங்களில் இல்லாத நிகழ்வாக அண்மையில் ஒரே நாளில் 16 செமீ மழை பெய்தது கூட எல் லினோ தாக்கம் தான்.

சரி விஷயத்திற்கு வருவோம். கடுமையான வறட்சி காரணமாக, தண்ணீர் பற்றாக்குறை தென் அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. சாதாரண தண்ணீர் பற்றாக்குறை அல்ல. அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. உருகுவே நாட்டின் தலைநகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் அளவிற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

உருகுவே நாட்டின் அதிபர் லுய்ஸ் லக்கால்லே போவ் (Luis Lacalle Pou) தண்ணீர் பிரச்சனையை சமாளிப்பதற்காக அவசரநிலை பிரகடனம் செய்வதாக அறிவித்துள்ளார்.

உருகுவே நாட்டின் தலைநகர் மான்டிவீடியோவிற்கு புதிய குடிநீர் ஆதாரத்தை வழங்குவதற்காக சான் ஜோஸ் ஆற்றில் நீர் தேக்கம் மற்றும் குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கப்படும் என்று கூறிய உருகுவே அதிபர், திட்டம் 30 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று கூறினார்.

உருகுவே நாட்டின் வானிலை அதிகாரிகளின் கூற்றுப்படி, உருகுவே நாட்டில் அடுத்த சில வாரங்களுக்கு மழை பெய்யாது. அண்மைக்காலங்களில் உருகுவே நாட்டில் பாட்டில் தண்ணீர் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. உருகுவே நாட்டின் தலைநகர் மான்டிவீடியோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பாட்டிலின் விலை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

உருகுவே நாட்டில் ஏழு மாத காலமாக மிக அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. அத்துடன் 7 மாதங்களாக மழையும் இல்லை. ஒரு பக்கம் உயர் வெப்பநிலை மற்றும் வறண்ட வானிலை காரணமாக உருகுவே நாட்டில் ஆறுகள் வேகமாக வறண்டு போயின.இதனால் அங்கு கடுமையான தண்ணீர் நெருக்கடியை அந்நாடு எதிர்கொண்டுள்ளது.

உருகுவே நாட்டின் 60% மக்கள் வசிக்கும் தலைநகரம் Montevideo மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கு நன்னீரை வழங்கும் பாசோ செவரீனோ (Paso Severino) அணையின் நீர்மட்டம் மிகவும் மோசமான நிலைக்குக் குறைந்துள்ளது.

சான்டா லூசியா ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாசோ செவெரினோ அணையில் 67 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் 3.7 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் மட்டுமே மீதம் இருக்கிறது.

இந்த நிலையில் தான் உருகுவே நாட்டில்தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன்
உருகுவே நாட்டில் உள்ள 21 ஆயிரம் குடும்பங்களுக்கு, இலவசமாக 2 லிட்டர் தண்ணீரை அரசு வழங்கும் என்றும், குடிநீர் பாட்டிலுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் உருகுவே அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

அரிசியும், சர்க்கரையும் ரேஷனில் அளந்து வாங்குவது போல, அரசு கொடுக்கும் 2 லிட்டர் தண்ணீருக்காக பல மணி நேரம் அந்நாட்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உருகுவே நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையால் போராட்டங்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு மக்களுக்கு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைக்க உருகுவே அரசு அறிவுரை வழங்கி உள்ளது. வணிக நடவடிக்கைகளுக்கு மாற்று நீர் விநியோகங்களை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. தண்ணீரை புகழ்பெற்ற சப்ளையர்களிடமிருந்து மட்டுமே வாங்கி பயன்படுத்துமாறும், தரமற்ற தண்ணீரை வாங்க வேண்டாம் என்றும் உருகுவே அரசு அறிவுரை வழங்கி உள்ளது. உருகுவேயில் ஏற்பட்டுள்ள நிலையில், நாளை எந்த நாட்டில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே சென்னையில் சில ஆண்டுக்கு முன்பு தொடர்ந்து ஆறு மாதம் மழையே பெய்யாமல் போனது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பெரிய அளவில் சரிந்து மக்கள், தண்ணீருக்காக அல்லாடிய நிலை ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.