கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு – கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு

சென்னை: கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019-ன்படி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் மூலம் அங்கரிக்கப்பட்ட நிறுவனமான நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM), சென்னை என்ற மைய அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துக்கு தமிழகத்துக்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கும் பணி சுற்றுச்சூழல் துறை மூலம் வழங்கப்பட்டது.

இத்திட்டம் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டு, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019 வழிமுறைகள்படி, தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு மற்றும் நிலப்பயன்பாட்டு வரைபடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 1:25000 என்ற உருவளவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019 இணைப்பு IV, பத்தி 6ன் படி, தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு குறித்து அரசுத் துறைகள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகள்/ ஆட்சேபணைகளை அறிய 16.06.2023 அன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் இணையதளத்திலும் (http://www.environment.tn.gov.in) மற்றும் இத்துறையின் ENVIS மையத்தின் இணையதளத்திலும் (http://www.tnenvis.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, நிறுவனங்கள், பொதுமக்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு குறித்த தங்களின் ஆலோசனைகள் /ஆட்சேபணைகள் ஏதுமிருப்பின் இத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் அதாவது (04.08.2023) அன்றுக்குள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுத்து மூலம் இத்துறைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.