உடுமலை: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலவும் நிர்வாக குளறுபடிகளால் ஆலையை இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பொங்கலூர், பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் கரும்புகள் அரவைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன.
நடப்பாண்டு மார்ச் மாதத்தில் தொடங்க வேண்டிய அரவை, பராமரிப்பு பணி காரணமாக மே மாதம் தொடங்கியது. இதுவரை 30 முறைக்கும் மேல் இயந்திரம் பழுதானதால் அரவைப்பணிகள் நிறுத்தப்பட்டன. 2,000 ஏக்கர் பரப்பில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து கரும்பை வெட்டி எடுக்க காலதாமதம் ஏற்பட்டது. ஓராண்டை கடந்தும் வெட்டப்படாத கரும்பு, போதிய தண்ணீர் இன்றி காயத் தொடங்கியது.
இந்நிலையில், அரவைக்காக வெட்டி எடுத்து செல்லப்பட்ட 3000 டன் கரும்பு வேறு வழியின்றி தனியார் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆலையின் பிழிதிறன் 9 சதவீதத்தில் இருந்து 7-ஆக குறைந்துள்ளது. இது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது: 60 ஆண்டுகளில் இல்லாத நிர்வாக குளறுபடிகள் நடப்பாண்டில் ஏற்பட்டது தான் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம். கடந்த ஆண்டு அரசு ரூ.16 கோடி கடனாக வழங்கியது. இதன்மூலம் நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஆலையின் மோசமான சூழலை கருதி பல விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலம் தனியார் ஆலைகளுக்கு கரும்பை விநியோகிக்க நேர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1,250 டன் அரவை செய்ய வேண்டிய நிலையில், தினமும் 750 டன் மட்டுமே அரவை செய்யப்படுகிறது. நடப்பாண்டு 1 லட்சம் டன் கரும்பு அரவை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 30,000 டன் மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து சுமார் 25,000 டன் கரும்பு தனியார் ஆலைகளுக்கு அனுப்ப ரகசிய பேரம் நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் ஆலையை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்படும், என்றனர். திமுக துணை அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு ஆலையில் பணிபுரியும் நிர்வாக அலுவலர்களே முக்கிய காரணமாக இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தென்னிந்தியாவிலேயே அதிக பிழிதிறன் கொண்ட ஆலையாக இது செயல்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின் போது 1994-ல் ஒரு கோடியே 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிசாராய ஆலை ஏற்படுத்தப்பட்டது. 20 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்தவர்கள் இந்த ஆலையை புனரமைக்க எந்த விதமான நிதியும் ஒதுக்கவில்லை.
அதனால் ஆலை தன்னுடைய முழுமையான அரவைத் திறனை இழந்துள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு 15 நாட்களில் பணம் பட்டுவாடா செய்யவேண்டும். அடுத்த ஆண்டு அரவைக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
கூடுதல் ஆட்களை நியமித்து அரவைக்கு தேவையான கரும்பை பதிவு செய்ய வேண்டும். அமராவதி வாய்க்காலில் இருந்து கரும்பு பயிரிடுவதற்கான உயிர் தண்ணீர் 21 நாட்களுக்கு உடனடியாக திறந்துவிட வேண்டும். ஆலையை புனரமைக்க தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும். நிர்வாக குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும், என்றனர்.