பெண்கள் தங்களது கர்ப்பத்தை அறிந்து கொள்ள, இதுவரையில் சிறுநீரைப் பரிசோதனை செய்துவந்த நிலையில், தற்போது உலகிலேயே முதன்முறையாக உமிழ்நீரைக் கொண்டு அறியக்கூடிய புதிய தயாரிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
`சாலிஸ்டிக்’ (Salistick) என்று அறியப்படும் இந்தச் சோதனைக் கருவியை, ஜெருசலேமைச் சேர்ந்த ஸ்டார்ட்- அப் நிறுவனமான சாலிக்னோஸ்டிக்ஸ் (Salignostics) உருவாக்கியுள்ளது.
கோவிட் சோதனை கருவிகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கர்ப்பத்தை உறுதி செய்யும் இந்த கிட்டில் இருக்கும் குச்சியின் நுனியை, தெர்மாமீட்டரை வாயில் வைப்பது போன்று வைக்க வேண்டும். இது உமிழ்நீரைச் சேகரிக்கும். அந்த உமிழ்நீரை பிளாஸ்டிக் டியூபில் மாற்ற வேண்டும். இங்கே வேதியியல் நிகழ்வுகள் நடைபெற்று, கர்ப்பத்திற்குரிய ஹார்மோன் இருக்கிறதா என்பதைக் கண்டறியும். இதனை `spit test’ என்று அழைக்கின்றனர்.
ஐந்து முதல் 15 நிமிடங்களுக்குள் கர்ப்ப பரிசோதனை குறித்த முடிவுகளை, இதில் அறிய முடியும். ஆரம்ப அறிகுறிகள், முதல் மூன்று நிமிடங்களுக்கு முன்பே தோன்றிவிடும்.
இஸ்ரேலில் கர்ப்பிணி மற்றும் கர்ப்பிணி அல்லாத 300-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மருத்துவப் பரிசோதனைகளை நடத்திய பிறகு, சாலிக்னோஸ்டிக்ஸ் நிறுவனம், இந்தத் தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இந்தத் தயாரிப்பு விற்பனைக்கு வந்துள்ளது.
`கர்ப்ப பரிசோதனையின் முடிவுகள் மிகவும் துல்லியமாக இருக்கின்றன. எந்தச் சமயத்திலும் எந்த நேரத்திலும் பெண்கள் இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ளலாம்’ என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.