மதுரை:
2021-ம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வத்தை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆள் கடத்தல் என ஒரு காலத்தில் மதுரையை கலக்கி வந்தவர். பல ஆண்டுகள் சிறைவாசமும் அனுபவித்தவர். இதனிடையே, கடந்த பல ஆண்டுகளாக குற்றச்சம்பவங்களில் ஏதும் ஈடுபடாமல் வரிச்சியூர் செல்வம் இருந்து வந்தார். மேலும், பல யூடியூப் சேனல்களில் தனது வாழ்க்கை வரலாறு குறித்து அவர் பேட்டியும் அளித்து வந்தார். கழுத்து, கைகளில் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிவது இவரது அடையாளமாக இருந்து வந்தது.
இந்த சூழலில், வரிச்சியூர் செல்வத்தின் நெருங்கிய கூட்டாளியான செந்தில் குமார் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது வரிச்சியூர் செல்வத்தின் மீது சந்தேகம் வரவே, அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, செந்தில் குமாரை தான் கொலை செய்ததாக செல்வம் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.
வரிச்சியூர் செல்வத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, செந்தில் குமாரின் சடலத்தை அவரது கூட்டாளிகள் திருநெல்வேலி முறப்பநாடு தாமிரபரணியில் ஆற்றில் வீசியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்பேரில் போலீஸார் இன்று மாலை வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர். அவர் மீது ஆள் கடத்தல், கொலை உட்பட 9 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.