கொரிய தொழில்வாய்ப்புகளுக்காக பணியாளர்கள் செல்லும் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு உட்பட்ட விமானம் நேற்றும் தாமதமடைந்ததினால் தொழிலாளர்களை கொரியாவிற்கு அனுப்பமுடியாமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்காரவினால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க கொரிய விமான சேவை நிறுவனம் கொரிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் , இரண்டு மாதங்களுக்குள் கொரியாவுக்கு தொழிலுக்காக செல்லும் தொழிலாளர்களை கொரிய விமான சேவை ஊடாக கொரியாவுக்கு நேரடியாக அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
விமானங்களின் தாமதத்தினால் பணியாளர்களை தொழிலுக்காக ஏற்றுக்கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படுத்துகின்றன. முன்னதாக, கொரிய வேலைகளுக்காக தொழிலாளர்கள் பயணிக்கும் விமானம் மூன்று சந்தர்ப்பங்களில் தாமதமானது. சில சமயங்களில் தொழிலாளர்களை உரிய காலத்திற்குள் அனுப்பிவைக்க முடியாமல் போனது. கொரியாவில், அந்நாட்டு நேரப்படி காலை எட்டு முதல் ஒன்பது மணி வரை எமது தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்திற்கு மேற்பட்டால் தொழிலாளர்களை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
நேற்றும், இவர்கள் பல எதிர்பார்ப்புடன் மூட்டை முடிச்சுகளுடன் நம்பிக்கையுடன் விமானிலையத்திற்கு செல்ல தயாராக இருந்தனர். கொரியா செல்ல நேற்று 800வது குழு தயாராக இருந்தது. எண்ணூறாவது குழு பயணத்தின் மிக அருகாமைக்குச்சு சென்று , நல்லாசிகளையும் பெற்று எல்லாவற்றையும் தயார் செய்தாலும், விமானம் தாமதமாகுகிறது.
ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்ந்தும் இவ்வாறு தாமதமாவதால், இதற்கு தீர்வாக கொரிய அரசாங்கத்துடன் நாம் கலந்துரையாடி எதிர்காலத்தில் கொரியன் விமான நிறுவனம் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கொரியா மற்றும் இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தற்காலிகமாக சிங்கப்பூர் வழியாக தொழிலாளர்களை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றோம். ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் மூலம் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து கொரியன் விமான சேவை மூலம் கொரியாவுக்குச் செல்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இலங்கையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் தாமதமாக வந்தாலும், சிங்கப்பூரில் இருந்து கொரியாவுக்கு பல விமான சேவைகள் இருப்பதால் அதை முகாமைத்துவம் செய்துக்கொள்ள முடியும்.
சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, கொரிய விமான சேவை ஆரம்பமான பின்னர் தொழிலாளர்கள் கொரியன் விமான சேவை மூலம் நேரடியாக கொரியாவுக்கு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.