பெங்களூரு:
போலி செய்திகள்
முதல்-மந்திரி சித்தராமையாவை போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நேற்று கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சித்தராமையா கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அப்போது சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தவறான தகவல்களை அதிகளவில் பரப்பினர். அதே போல் தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக போலி செய்திகள் அதிகமாக பரப்பப்பட்டு வருகின்றன. நமது அரசியல் எதிரிகள் இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அமைதியை குலைக்க…
நாடாளுமன்ற தேர்தல் வருவதால், போலி செய்திகளை அதிகமாக பரப்பி சமுதாயத்தில் அமையை குலைக்க முயற்சி செய்வார்கள். அதனால் தொடக்கத்திலேயே பொய் செய்திகள் எங்கிருந்து பரப்பப்படுகிறது என்பதை கண்டறிந்து அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த முறை குழந்தைகள் கடத்தல், மாட்டிறைச்சியை கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்து பொய் செய்திகளை பரப்பி வன்முறையை ஏற்படுத்தினர். இந்த முறை பா.ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகளை மக்கள் மிக தெளிவாக நிராகரித்துள்ளனர். நாட்டை பாதுகாக்க அடுத்த ஆண்டு (2024) நாம் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். இந்த நேரத்தில் வதந்திகள் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அதனால் இவற்றை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உண்மை கண்டறியும் குழு
இதற்கு முன்பு பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலி செய்திகளை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க தனியாக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டது. பா.ஜனதா ஆட்சி அமைந்ததும் அந்த உண்மை கண்டறியும் குழுவை ரத்து செய்துவிட்டனர். அதனால் அந்த குழுவை மீண்டும் அமைக்க வேண்டும். சைபர் குற்ற போலீசார் வதந்திகளை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மாதந்தோறும் இதுகுறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.