வடசென்னையைச் சேர்ந்தவர் சித்ரா( பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) (26). இவர் தேனாம்பேட்டை பகுதியிலுள்ள அழகு நிலையத்தில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 19-ம் தேதி வேலைக்குச் செல்ல சித்ரா, மெட்ரோ ரயிலில் வந்தார். பின்னர் அவர் தேனாம்பேட்டை அண்ணாசாலை வழியாக தனியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர், சித்ராவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். அதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து இளைஞரைத் தேடிவந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது இளைஞர் ஓட்டி வந்த பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரித்தபோது, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த உதய சரவணன் (31) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில் எம்.பி.ஏ படித்த உதய சரவணன், அண்ணா மேம்பாலம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருவதும், தினமும் மெட்ரோ ரயிலில் வந்து செல்வதும் தெரியவந்தது. சம்பவத்தன்று மழை பெய்து கொண்டிருந்ததால் உதய சரவணன், பைக்கில் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். அப்போது, தனியாக நடந்து சென்ற சித்ராவிடம் அநாகரிகமாக நடந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உதய சரவணனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.