சினிமாவில் 25 ஆண்டுகள் : கரண் ஜோஹருக்கு ஷாரூக்கான் வாழ்த்து
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். 1998ம் ஆண்டு வெளியான 'குச் குச் ஹோதா ஹை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து “கபி குஷி கபி காம், கபி அல்விதா நா கெஹ்னா, மை நேம் இஸ் கான், ஸ்டூடன்ட் ஆப் த இயர், பாம்பே டாக்கீஸ், ஏ தில் ஹை முஷ்கில்,” ஆகிய படங்களை மட்டுமே கடந்த 25 ஆண்டுகளில் இயக்கியுள்ளார். ஆனால், 50 படங்கள் வரையிலும் தயாரித்துள்ளார். டிவியிலும் தொடர்ந்து சில பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.
கரண் ஜோஹர் தற்போது இயக்கி வரும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' என்ற படத்தின் டீசர் நேற்று வெளியானது. சினிமாவில் கரணின் 25வது ஆண்டில் வெளியாகியுள்ள அந்த டீசரைப் பகிர்ந்து நடிகர் ஷாரூக்கான், “வாவ் கரண் ஜோஹர்…திரைப்பட உருவாக்குனராக 25 ஆண்டுகள்…நீ நீண்ட தூரம் வந்துவிட்டாய் பேபி…உனது தந்தையும் எனது நண்பருமான டாம் அங்கிள் இதை சொர்க்கத்தில் இருந்து பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்வார். உங்களிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், நீங்கள் இன்னும் நிறைய நிறைய படங்களை இயக்க வேண்டும். வாழ்க்கையில் காதலின் மேஜிக்கைக் கொண்டு வர நீங்கள் தேவை. அது உங்களால் மட்டுமே முடியும்.. 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' டீசர் அழகாக உள்ளது. உங்களுக்கும் குழுவினருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார்.