செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, பொன்னையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றிற்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக கூறும் வகையில், சிறிய சரக்கு வாகனத்தில் 30 அடி உயர மதுபுட்டி கட்அவுட்டுடன் ஊர்வலமாகச் சென்றனர்.
மதுரை ஆரப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி,வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று நாமக்கல், செங்கல்பட்டு உட்பட தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவற்றில், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.