செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரின் உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர், அமலாக்கத்துறை சார்பில் சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லம், ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் அசோக்குமார் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, அபிராமபுரத்தில் உள்ள மற்றொரு குடியிருப்பு, கரூரில் செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் வீடுகள் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.

இதனையடுத்து அதிமுக ஆட்சியின் போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது சமயத்தில், நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது அறுவை சிகிச்சையும் நிறைவடைந்திருக்கிறது.
இந்தநிலையில் இனி அமலாக்கத்துறையின் மூவ் என்னவாக இருக்க போகிறது என்பது தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பேசினோம், “செந்தில் பாலாஜி கைது செய்த பின்னர் இதுவரை ஒரு முறை கூட அவரிடம் விசாரணை நடத்தவில்லை. ரெய்டு விசாரணையின் போது செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. எனவே அவரை 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால், எங்களுக்கு எட்டு நாட்கள் மட்டும் அவசாகம் கொடுக்கப்பட்டது. இருந்த போதும் அவரின் உடல் நிலை காரணமாக, எங்களால் அந்த விசாரணையும் நடத்த முடியாமல் இருக்கிறது.

இதற்கிடையே, அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்துக்கு சென்றோம். அங்கு அவரது தரப்பில் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை வாதிட்டார்கள். இது எங்களுக்கு சாதகமாக பார்க்கிறோம். ஏனென்றால், சாதாரண வழக்குகளில் குறிப்பிட்ட நாள்கள் வரை ஒருவரை விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டு, அந்த காலத்துக்குள் நடக்கும் விசாரணையில் புதிய தகவல்கள் கிடைக்கவில்லை எனில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பெரிதாக இருக்காது.
ஆனால், அமலாக்கத்துறையை பொறுத்தவரை, ‘எங்களுக்கான விசாரணை காலத்தில் அவரது உடல்நிலை காரணமாக விசாரிக்க முடியவில்லை. அவரின் உடல்நிலை சரியான பிறகு மீண்டும் எங்கள் கஸ்டடிக்கு எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று எங்களால் கேட்க முடியும். அந்த வியூகத்தின் அடிப்படையிலேயே இப்போதைய நகர்வுகள் இருக்கின்றன. எங்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த எட்டு நாட்கள் விசாரணை வளையத்துக்குள் எப்படியும் செந்தில் பாலாஜி வந்துதான் ஆகவேண்டும்.

அமலாக்கத்துறையை பொறுத்தவரை விசாரணையில் பெறப்படும் ஒவ்வொரு சொற்களும் ரெக்கார்டுகள்” என்கிறார்கள்.
இதனிடையே செந்தில் பாலாஜியின் தம்பி, அசோக் குமாரை நேற்று (ஜூன் 20) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அதோடு அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்த பிறகு, வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் விசாரணைக்கு ஆஜராகி, விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சம்மனுக்கு, அசோக்குமார் தரப்பில், ‘அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை தயார் படுத்த வேண்டும். இது சட்ட ரீதியான நகர்வு இருப்பதால் இந்த தேதியில் ஆஜராக முடியாது’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.