'ஜெயம்' படம் வெளிவந்து 20 ஆண்டுகள் நிறைவு
ராஜா இயக்கத்தில் ரவி, சதா மற்றும் பலரது நடிப்பில் 2003ம் ஆண்டு ஜுன் 21ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயம்'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. தெலுங்கில் 2002ம் ஆண்டில் வெளிவந்த 'ஜெயம்' படத்தை அதே பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். தெலுங்கில் நடித்த சதா, தமிழிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். படம் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற பிறகு படத்தின் இயக்குனர் ராஜா, ஜெயம் ராஜா என்றும், கதாநாயகன் ரவி ஜெயம் ரவி என்றும் பிரபலமானார்கள்.
ஜெயம் ரவி என்று இன்று வரை அதே பெயரே ரவிக்கு நிலைத்துவிட்டது. ஜெயம் ராஜா மட்டும் தன்னை மோகன் ராஜா என அப்பா பெயரை சேர்த்து மாற்றிக் கொண்டார்.
வசதியான குடும்பத்துப் பெண்ணைக் காதலிக்கும் ஏழைப் பையன் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. அந்தக் காதலுக்கு வரும் எதிர்ப்புகளை மீறி காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சாதாரணக் கதையாக இருந்தாலும் சுவாரசியமான காட்சிகளாலும், அழுத்தமான கதாபாத்திரங்களாலும், இனிமையான பாடல்களாலும் இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து பெரும் வெற்றியைப் பெற்றது.
தெலுங்கில் இசையமைத்த ஆர்பி பட்நாயக், தமிழிலும் இசையமைத்தார். “கவிதையே தெரியுமா….”, “கோடி கோடி மின்னல்கள்…” இரண்டு மெலடி பாடல்கள் இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்தின. மற்ற பாடல்களும் ஹிட்டாகின.
கதாபாத்திரத்திற்கேற்ற ஜெயம் ரவியின் நடிப்பு, அழகான ஹோம்லியான கதாநாயகியாக சதா, மிரட்டல் வில்லனாக கோபிசந்த் என அறிமுக நடிகர்களை வைத்து வெற்றி பெறுவது சாதாரண விஷயமல்ல. அப்பா எடிட்டர் மோகன் தயாரிக்க, மூத்த மகன் ராஜா இயக்க, இளைய மகன் ரவி கதாநாயகனாக அறிமுகமாக ஒரு குடும்பப் படமாக வெளிவந்து வெற்றி பெற்ற படம்.
20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பட இயக்குனர் ராஜா, அப்போது நடைபெற்ற பட பூஜை புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு, “20 ஆண்டுகளாக ,எங்களுக்கான உங்களது அன்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.