சென்னை: தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனையிலேயே வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 8 நாட்களுக்கு விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 16-ம்தேதி அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, தனியார் மருத்துவமனையின் மருத்துவர் குழுவை அமலாக்கத் துறையினர் அணுகியுள்ளனர்.
அப்போது, ‘‘இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம், தற்போதைய சூழலில் விசாரணை நடத்தினால், அது அவரது இதயத்தை மேலும் பலவீனப்படுத்தும்’’ என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. நீதிமன்ற பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலமாக இத்தகவலை குறிப்பாணையாக அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. இதை நீதிமன்றமும் ஏற்று, பதிவு செய்துகொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மனு: இதற்கிடையே, செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, கேவியட்மனு தாக்கல் செய்துள்ளார்.