மக்களை காக்க ‘மனித உருவில் வந்த கடவுள்’ என தன்னைத் தானே கூறிக்கொண்டு பேச முடியாதவர்களை பேச வைப்பதாகவும், நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும் கூறி நாடகமாடிய தமிழகத்தைச் சேர்ந்த போலி சாமியார் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நானே மகா விஷ்ணு… நானே பாண்டுரங்கன்… எனக் கூறிக் கொண்டு மகாவிஷ்ணு வேடத்திலேயே, தெலுங்கானா பக்தர்களுக்கு பால்கோவா கொடுத்ததாக போலீசாரிடம் சிக்கி உள்ள செஞ்சியை சேர்ந்த போலி சாமியாரான சந்தோஷ் குமார் இவர் தான்..!
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமாருக்கு இரு மனைவிகளும், ஒரு மகனும் உள்ளனர். தெலங்கானாவில் தங்கியிருந்த இவர் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது இரு மனைவிகளில் ஒருவரை ஸ்ரீதேவி எனவும், மற்றொருவரை பூதேவி எனவும் அறிவித்துக் கொண்டார்.
மக்களை காக்க மனித உருவில் வந்திருப்பதாக கூறி 5 தலை நாகமான, ஆதிசேசன் பாம்பு போன்று கட்டில் அமைத்து, அதில் ஏறி அனந்த சயனத்தில் படுத்துக் கொண்டு தனது இரு மனைவிகளையும் கால் அமுக்கி விட வைத்து பக்தர்களை ஏமாற்றிய சந்தோஷ், திருப்பதி ஏழுமலையான் வேடமணிந்து ‘நான் தான் கடவுள்’ எனக்கூறி பிரச்சாரம் செய்து வந்ததாக கூறபடுகின்றது
இது மட்டுமின்றி, தன்னை காண வரும் பக்தர்களுக்கு தன்னால் சரியாக கலந்துரையாட முடியவில்லை என்று கூறி அம்மாநிலத்தில் அமைந்துள்ள பாலமூறு மாவட்ட உமித்யாலா கிராமத்தின் தலைவர் சத்தியநாராயணா என்பவரிடம், தனக்கு என்று தனியாக இடம் ஒதுக்குமாறு கேட்டுள்ளார். அதன்பேரில், சத்யநாராயணாவும் விவசாய நிலத்திற்கு மத்தியிலுள்ள வீட்டை இலவசமாக வழங்கினார்.
சுவாமி-ஜியின் மகிமையால் வாய் பேச முடியாத பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என சுற்றுவட்டாரக் கிராம மக்களிடையே தகவல் தீயாய் பரவியதை நம்பி, சந்தோஷ் சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ் ஒரு போலி சாமியார் என்பது தெரியவந்ததையடுத்து சந்தோஷை கைது செய்தனர்
அவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது பக்தகோடிகள் பாண்டு ரங்கா என்று கோஷமிட்ட நிலையில் , அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.