நீர்மூழ்கி கப்பல் மாயம்: 40 மணி நேரத்துக்கு குறைவான ஆக்சிஜன் மட்டுமே இருப்பு உள்ளதால் தேடுதல் வேட்டை தீவிரம்

வாஷிங்டன்,

அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயமானது. அதில் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டைட்டானிக் படம்

இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி 1912-ம் ஆண்டு ஆர்.எம்.எஸ். டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் புறப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 224 பேர் பயணம் செய்தனர். ஆனால் வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்றபோது ராட்சத பனிப்பாறையில் மோதி இந்த கப்பல் 2 ஆக உடைந்து கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் கடலில் மூழ்கி ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கப்பலின் சிதைவுகள் 1985-ல் கண்டுபிடிக்கப்பட்டன. அதுமுதல் ஆராய்ச்சியாளர்கள் நீர் மூழ்கி கப்பல்களில் கப்பலின் சிதைவுகள் கிடக்கும் பகுதிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட டைட்டானிக் படம் 1997-ல் வெளியாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

பிரத்யேக நீர்மூழ்கி கப்பல்

அதேவேளை, சுற்றுலா பயணிகளும் சென்று டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க சில கப்பல் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன.

இதற்காக ஆழ்கடல் பயணங்களை ஏற்பாடு செய்யும் அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனம் பிரத்யேக நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது. 8 நாள் பயணமான இந்த சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.2 கோடி) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து இங்கிலாந்து கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங் உள்பட 5 பேர் நீர்மூழ்கி கப்பலில் அழைத்து செல்லப்பட்டனர். இந்த கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆனதும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

தீவிர தேடுதல் வேட்டை

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த நீர்மூழ்கி கப்பலை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. எனவே கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, கனடா கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல் போன்றவையும் இந்த தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளன.

இது குறித்து ஓசன்கேட் நிறுவனம் கூறுகையில், நீர்மூழ்கி கப்பலில் 40 மணி நேரத்துக்கு குறைவான ஆக்சிஜன் இருப்பு மட்டுமே உள்ளது. எனவே கப்பலில் இருந்தவர்களை உயிருடன் மீட்க சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்கு அரசு மற்றும் ஆழ்கடல் நிறுவனங்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.