பல வருட காத்திருப்பு நிறைவேறியது : தாத்தா சிரஞ்சீவி நெகிழ்ச்சி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம்சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் குழந்தை பிறந்ததை தொடர்ந்து தெலுங்கு திரையுலகமே மருத்துவமனை முன் திரண்டு அப்பா ராம்சரணுக்கு வாழ்த்து கூறிவருகிறார்கள். ஆஸ்பத்திரி முன்பு மீடியாக்களும், ரசிகர்களும் குவிந்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்திருப்பதுதான் இந்த கொண்டாட்டங்களுக்கு காரணம்.

ராம் சரணின் தந்தையும், தெலுங்கு நடிகருருமான சிரஞ்சீவி மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். மருத்துமனையின் வாசலில் நின்று வாழ்த்து சொல்ல வருகிறவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது “எங்கள் குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த பெண் குழந்தை எங்களுக்கு மிகவும் முக்கியம். ராம்சரண் மற்றும் உபாசனாவை பெற்றோர்களாக காண நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

ராம் சரண் தந்தையானதும் எங்கள் நண்பர்களிடமிருந்தும், உலகெங்கிலும் உள்ள அவருடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் அன்பையும், வாழ்த்தையும் பொழிந்து வருகிறார்கள். எங்களின் மகிழ்ச்சியை தங்களுடையதாக உணர்கிறார்கள். இவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்தியதற்கும், அன்பை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியோர்களின் கூற்றுப்படி நல்ல நேரத்தில் குழந்தை பிறந்திருக்கிறது. பிறப்பதற்கும் முன்னே நல்ல அறிகுறிகளும் தென்பட்டன. தொழில்துறையில் ராம்சரண் அடைந்த வளர்ச்சி, அவரது சாதனைகள், வருண் தேஜின் நிச்சயதார்த்தம். என பல விசயங்களை குறிப்பிடலாம். கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களில் எங்கள் வாழ்வில் நல்ல விசயங்கள் நடந்திருக்கின்றன. இவை அனைத்திற்கும் பிறந்த பெண் கொண்டிருக்கும் நேர்நிலையான ஆற்றலே காரணம் என நான் உணர்கிறேன்.

எங்கள் குடும்பம் ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை என்பது ஆஞ்சநேயருக்கு உகந்த நாள். மேலும் இந்த நல்ல நாளில் குழந்தை பிறந்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம். அப்பல்லோ மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்கள் குழு பிரசவத்தை குறைபாடற்ற முறையில் கையாண்டது. இதற்காக அனைவருக்கும் நன்றி'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.