திருவாரூர்: மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழுக்கும் ஆபத்தாக அமையும். அத்தகைய பாஜகவை வீழ்த்த, பிஹார் மாநிலம் பாட்னாவில் வரும் 23-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்று, திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, அவரது நினைவாக திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7,000 சதுரஅடி பரப்பில் ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பின்னர், கலைஞர் கோட்டத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதல்வர் ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், 2-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துவேலர் நூலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வாழும்போது வள்ளுவர் கோட்டம் கண்ட கருணாநிதிக்கு, திருவாரூரில் எனது தாயார் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. என் தாயார், தனது கணவருக்கு கட்டிய கோயிலாகவே இதை கருதுகிறேன்.
‘ஜனநாயகம் என்பது வீட்டின் விளக்கு, சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ’ என்று கருணாநிதி கூறுவார். மத்தியில் கடந்த 9 ஆண்டுகளாக சர்வாதிகார பாஜக, ஆட்சியில் உள்ளது. அத்தகைய பாஜகவை வீட்டுக்கு அனுப்புவதற்காக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில், பிஹார் மாநிலம் பாட்னாவில் வரும் 23-ம் தேதி ஆலோசனை கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாடு செய்து வருகிறார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழுக்கும் ஆபத்து. பாஜகவை வீழ்த்த, அந்த கூட்டத்தில் வியூகங்கள் வகுக்கப்படும். ‘நாளையும் நமதே, நாற்பதும் நமதே’எனும் முழக்கத்தோடு, உங்கள் வாழ்த்துகளுடன் அதில் நான் பங்கேற்க உள்ளேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்று, கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. திடீர் உடல்நலக் குறைவுகாரணமாக விழாவில் அவர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விழாவில் அவரது உரையை திருச்சி சிவா எம்.பி. வாசித்தார். தொடர்ந்து, பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசினார்.
முன்னதாக, தனி விமானத்தில் திருச்சி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் வந்த தேஜஸ்வி யாதவை டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ், டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விழாவில் பங்கேற்ற தேஜஸ்வி, முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அங்கு உள்ள புகைப்படங்கள், கருணாநிதி எழுதிய புத்தகங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை குறித்து அவருக்கு முதல்வர் ஸ்டாலின்,டி.ஆர்.பாலு ஆகியோர் விளக்கினர்.
கருணாநிதியின் அருகே அமர்ந்திருப்பதுபோல, பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வசதி அங்கு அமைக்கப்பட்டுள்ளது. தேஜஸ்வி அங்கு அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பிஹார் அமைச்சர் சஞ்சய் ஜா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு,கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மோகன் காமேஸ்வரன் வரவேற்றார்.அறங்காவலர் சம்பத்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக, வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், மாலதி லஷ்மண் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.