பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது; கடும் போக்குவரத்து நெரிசல்

பெங்களூரு:

பெங்களூருவில் கனமழை

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் போதிய மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து பெங்களூருவில் லேசான சாரல் மழை பெய்து வந்தது. மேலும் நேற்று காலை முதல் சூரியனே தென்படாத வகையில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

மேலும் நகரின் பல பகுதிகளில் அதிகாலை முதலே லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் நகரில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் தாழ்வான சாலைகள், சுரங்க சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

கடும் போக்குவரத்து பாதிப்பு

நேற்று ராஜாஜிநகர், யஷ்வந்தபுரம், ஹெப்பால், கே.ஆர்.புரம், தேவனஹள்ளி, கே.ஆர்.மார்க்கெட், கெங்கேரி, எம்.ஜி.ரோடு, எச்.எஸ்.ஆர். லே-அவுட், ஹெப்பால், கே.ஆர். சர்க்கிள், மைசூரு சாலை, ஒகலிபுரம், அல்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. பெல்லந்தூர் வெளிவட்ட சாலை, ஈகோ ஸ்பேஸ் பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் ஆறுபோல் மழைநீர் பாய்ந்தது. மேலும் ஹெப்பால் பகுதிகளில் பெய்த கனமழையால் விமான நிலையம் செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கித்தவித்தன.

இந்த கனமழையால் பெங்களூரு நகரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதை பார்க்க முடிந்தது.

நேற்று முன்தினம் வரை கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், சீதோஷ்ண நிலை மாறி மழை பெய்ய தொடங்கி உள்ளதால் பெங்களூருவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

25-ந் தேதி வரை…

பெங்களூரு மட்டுமின்றி ஹாசன், மைசூரு, சிக்கமகளூரு, மண்டியா, கோலார், சிக்பள்ளாப்பூர், சிவமொக்கா உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று பலத்த மழை கொட்டியது. வடகர்நாடக பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மேலும் பெங்களூரு, கோலார், மைசூரு, சிக்பள்ளாப்பூர், மண்டியா, சிக்கமகளூரு, சிவமெக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி 25-ந் தேதி வரை பல்வேறு பகுதிகளில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.