சென்னை:
ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கட்டப்பட்ட பெருங்களத்தூர் மேம்பாலம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருப்பது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைப்பதற்காக அந்த பாலம் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் ஜிஎஸ்டி சாலை வழியாகதான் சிட்டிக்குள் செல்ல வேண்டும். அவ்வாறு வரும் வாகனங்கள் செங்கல்பட்டை கடந்து கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் வழியாக வண்டலூர் தாண்டும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வந்து விடுகின்றன.
ஆனால், அதற்கு பிறகு பெருங்களத்தூரை தாண்டும் போது தான் படாத பாடு பட வேண்டி இருக்கிறது. பெருங்களத்தூரில் இருந்து பழைய பெருங்களத்தூர் செல்ல வேண்டிய வாகனங்கள் ரயில்வே கிராசிங்கை கடப்பதற்காக வரிசைக்கட்டி நிற்பதே இதற்கு காரணம்.
பெருங்களத்தூர் பாலம்:
இந்த பிரச்சினையை சரி செய்யும் விதமாக பெருங்களத்தூர் ரயில் தண்டவாளத்துக்கு மேற்பகுதி வழியாக பழைய பெருங்களத்தூரை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடித்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால் பாலம் இருந்து கூட ரயில்வே கிராசிங்கில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே நிற்பதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஸ்தம்பிக்கும் போக்குவரத்து:
குறிப்பாக, காலை நேரங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. குறைந்தபட்சம், ரயில்வே கிராசிங்கில் சிக்னல் கிடைக்க 25 நிமிடங்கள் வரை ஆகிறது. இதேபோல, ஒரு நாளுக்கு 60, 70 முறையாவது அந்த ரயில்வே கேட் மூடப்படும். அவ்வளவு நேரமும் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்பதால் பல கி.மீ. தூரம் வரை பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பெரும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர்.
அமைச்சர் எ.வ. வேலு:
தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள பெருங்களத்தூர் பாலம் திறக்கப்பட்டு விட்டால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இந்நிலையில், ஒரு மாதமாகியும் பெருங்களத்தூர் பாலம் திறக்கப்படாததற்கு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு தான் காரணம் என அந்த துறை உயரதிகாரிகள் கூறுகின்றனர். அமைச்சர் எ.வ. வேலு நேரில் வந்து திறப்பதற்காகவே இந்த பாலம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நியாயமா இது?
“தொழில்நுட்ப வசதி பெருகிவிட்ட இந்தக் காலத்தில், காணொலிக் காட்சி வாயிலாக முதல்வரே இந்த பாலத்தை ஒரே நிமிடத்தில் திறந்து வைத்துவிடலாம். அப்படி இருக்கும் போது, ஒரு அமைச்சரின் வருகைக்காக ஆயிரக்கணக்கான மக்களை தினம் தினம் கஷ்டப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?” என பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.