டெல்லி: மணிப்பூரில் கடந்த 50 நாட்களாக தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் பதற்றம் நீடிக்கிறது. வன்முறையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு தவறிவிட்டது. மணிப்பூர் பாஜக ஆட்சியை கலைக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கும் நிலையில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது: ‛‛மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமைில் அனைத்து கட்சி கூட்டம் ஜூன் 24ம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரை பொறுத்தமட்டில் கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் வன்முறை வெடித்தது. சில நாட்களில் வன்முறையை கட்டுக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வன்முறை என்பது எல்லை மீறி சென்றுள்ளது. வீடு, கடைகள், வாகனங்களுக்கு தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அங்கு பதற்றமான சூழல் உள்ளது. இதனால் மணிப்பூரில் முதல்வர் பீரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில் தான் இந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து தான் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய முடிவு எடுக்க உள்ளது. அந்த முடிவு தான் மணிப்பூரில் பாஜக ஆட்சி தொடருமா? இல்லை நீடிக்குமா? என்பதை நிர்ணயம் செய்ய உள்ளது. இதனால் அனைவரின் கவனமும் இந்த கூட்டத்தின் மீது திரும்பி உள்ளது.